மதுரை: மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகேயுள்ள கம்பூர் கிராமத்தில் உள்ள மலைச்சரிவில் இரண்டு கல்வெட்டுகள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:
முதல் கல்வெட்டு நாலரை அடி நீளம், 3 அடி உயரம், 15 வரிகள் கொண்டுள்ளது. இதில், “மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஏழாம் ஆட்சி ஆண்டில், துவராபதி நாடு (இன்றைய நத்தம் பகுதி) எறிபடைநல்லூர் உடையார் ஈஸ்வரத்து இறைவனுக்கு படைத்தலைவன் பாஸ்கரன் என்பவன் நிலக்கொடை அளித்து, அதில் ஒரு மா அளவு நிலத்துக்கு வரும் வரியைத் கொண்டு கடமை, அந்தராயம் போன்ற வரிகளும் செலுத்தி, திரமம் என்னும் காசு ஒன்றும் கோயிலுக்கு தானமாகக் கொடுத்துள்ளான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கல்வெட்டு 6 அடி நீளம், 3 அடி உயரம், 14 வரிகள் கொண்டது. இதே பாண்டிய மன்னரின் 12-வது ஆட்சி ஆண்டில் பாஸ்கரன் என்னும் படைத்தலைவனுக்கு கம்பவூர் மக்களும், அப்பகுதியில் அதிகாரியாக இருந்த தென்னகங்க தேவனும் சேர்ந்து பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக ஒரு மா நிலம் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கிறது.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டை வாசித்து விளக்கினார். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் கல்வெட்டை மைபடி எடுத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.