மதுரை: மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்று கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சியில் அவர் கார் மீது இன்னொரு கார் உரசியது. இதையடுத்து மற்றொரு காரில் இருந்த இஸ்லாம் மத அடையாளத்தில் இருந்த இருவர் காரை மோதவிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாக நடைபெற்றதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தை பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், ஆதீனத்துக்கு எதிராக தேவையற்ற விமர்சனங்களை திமுக பரப்பி வருகிறது. இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கம் மட்டுமே பேச வேண்டும். இந்து மக்களின் உணர்வுகள் பாதிப்புக்கு எதிராக பேசக்கூடாது என திமுக நினைக்கிறது. திமுக பிரிவினை வாதம் தொடர வேண்டும் என விரும்புகிறது. அதற்கு எதிராக செயல்பட்டு வரும் என்னை திமுக தொடர்ந்து கைது செய்து வருகிறது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக கடந்த நான்கு ஆண்டில் 150 முறை கைது செய்யப்பட்டுள்ளேன்.
இந்து மத நம்பிக்கை கொண்ட ஆதீனம் போன்றவர்கள் சமய நம்பிக்கை மட்டுமே பேச வேண்டும். இந்து உணர்வுகள் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களை அசிங்கப்படுத்தும் வாய்ப்புகளை மேற்கொள்கின்றனர். ஆதீனம், மடங்கள் குறித்து இந்து மக்கள் மத்தியில் தவறாக பேசும் வேலையை திமுக செய்கிறது. இதை கண்டிக்கிறோம். மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதை ஆதீனத்திடம் தெரிவித்தேன். மதுரை ஆதீனம் தான் சிறு வயதில் இருந்து இஸ்லாமியர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன். முந்தைய ஆதீனங்களும் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என்றார்.
வேலூர் இப்ராஹிம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது விழாவில் பங்கேற்க முயன்றபோது அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. நேற்று அவர் கோரிப்பாளையத்தில் கள்ளழகரை தரிசித்தார்.