மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே.12-ல் நடக்கிறது. அப்போது, பல லட்சம் பக்தர்கள் கோரிப்பாளையம் பகுதியில் திரள்வது வழக்கம். அப்பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதாலும், கட்டுமான பொருட்களாலும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சத்ரா விஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், கோ. தளபதி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கோரிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்து ஆழ்வார்புரம் வழியாக நடந்துசென்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியை ஆய்வு மேற்கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதன்பின்பு, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் சித்திரை திருவிழா தொடங்கும் நிலையில் கோரிப்பாளையம் மேம்பாலம் பணி, கட்டுமான பொருட்களால் இடையூறு ஏற்படும் என, மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தோம். மே 10-ம் தேதிக்குள் கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற கட்டுமான நிறுவனம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கள்ளழகர் இறக்கும் வைகை ஆற்றுப்பகுதியிலுள்ள முட்புதர்களை அகற்றி, பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த நீர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளோம். வைகையில் சுவாமி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.
மேம்பாலப்பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலமடை மேம்பாலம் பணி 75 சதவீதமும், கோரிப்பாளையம் பாலம் 65 சதவீதமும் முடிந்துள்ளது. கோரிப்பாளையத்தில் நிலம் எடுப்பில் அமெரிக்கன் கல்லூரி தாளாளர் மதுரை உயர் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார். அவரது கோரிக்கை குறித்து எங்களிடம் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நாங்களும் அவர்கள் தரப்பில் பேசி, சமரசம் ஏற்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். அது கொடுத்த பிறகு பணி தொடர்ந்து நடக்கும். டிசம்பருக்குள் பால பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
சித்திரைத்திருவிழா போன்ற நேரத்தில் காவல்துறை பணி முக்கியம். இல்லையெனில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியில் கூடும்போது, அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு, தேவை காவல்துறையினருக்கு இருக்கிறது. ஏதாவது சிறிய சம்பவம் நடந்தாலும் இன்றைய சமூக வலைதளங்கள் அதனைப் பெரியதாக்கி பூதாகரமாக காட்டுக்கின்றன.
நாங்கள் செய்யும் 99 சதவீத நன்மையை காட்டுவதில்லை. பக்தர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை. காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை அழைத்து பேசியுள்ளோம். இம்முறை பாதுகாப்பு பணி சிறப்பாக இருக்கவேண்டும். உயிர் சேதம் எதுவுமின்றி பார்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
இத்திருவிழாவையொட்டி நேர்த்திக்கடனுக்கென பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். பொதுவாக அறநிலையத்துறை சார்பில், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த சில இடங்களில் சுத்தமில்லாத, ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வழங்கக்கூடாது. ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் சில ஹோட்டல்களில் கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருவிழாக்களில் ஆன்மீக நேர்த்திக்கடன் செலுத்துபோதும், வழங்கும் உணவு சுத்தமான பொருளா என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை உள்ளது. இது கட்டுப்பாடு இல்லையெனில் யார் எங்கே வேண்டுமானாலும் என்ன உணவு பொருளும் வழங்கலாம் என்றால் பக்தர்கள், மக்கள் உடல் நலம் பாதிக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் மதுரை மேலமடை பகுதியில் நடக்கும் மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.