“இந்த மண்ணை விட்டு எங்கேயும் நகர மாட்டோம்”
“எங்கள் ஊரையும் மலையையும் விட்டுவிடுங்கள்”
“பல்லாயிரம் வருட பாரம்பரியத்தை அழிக்க நினைக்கிறார்கள்”
டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிராக மதுரை மேலூர் தாலுகா மக்கள், பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை.
‘கனிம சுரங்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
கனிம சுரங்க எல்லைகளை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய சுரங்கத் துறை கூறியுள்ளது.
ஆனாலும், மதுரையில் பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடர்வது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய அரசின் ஏல அறிவிப்பும் தொடர் போராட்டமும்
மதுரை மாநகரில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அரிட்டாபட்டி என்ற கிராமம். மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் 48 கிராமங்கள் உள்ளன.
72 ஏரிகள், 200 நீரூற்றுகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை கட்டமைப்புகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், 250-க்கும் அதிகமான பறவையினங்கள், குடைவரை கோவில்கள் என தனித்துவம் வாய்ந்த பகுதியாக அரிட்டாபட்டி உள்ளது.
சுற்றிலும் மலைக் குன்றுகள், சுத்தமான நீரோடைகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமங்கள், கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரே காரணம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் தொடர்பான ஏல அறிவிப்பு.
கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்பின்படி, மதுரை மேலூர் தாலுகாவில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமையும்.
இந்த ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராகவே மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சர்ச்சை என்ன?
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு, தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியது.
அந்த செய்திக் குறிப்பில், ‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியின் பரப்பளவில் சுமார் 10 சதவீதம் (193.215 ஹெக்டேர்) பல்லுயிர்ப் பெருக்க தலமாக உள்ளதைப் பற்றி மாநில அரசு தெரிவித்தது. ஆனால், ஏலம் விடுவதை மாநில அரசு எதிர்க்கவில்லை’ எனக் கூறியிருந்தது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏல அறிவிப்பு தொடங்கி நவம்பர் மாதம் ஏல முடிவு அறிவிக்கப்படும் வரையில் எந்த எதிர்ப்பையும் மாநில அரசு தெரிவிக்கவில்லை என மத்திய சுரங்க அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
அத்துடன், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் வகையில் எல்லைகளை மறுஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் துறைக்கு சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இது டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க அரசின் நாடகங்களை வெளிக்காட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
துரைமுருகன் விளக்கம்
மத்திய சுரங்க அமைச்சக செய்திக் குறிப்பால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் 25 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகே திட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய சுரங்கத் துறை முடிவெடுத்ததாக துரைமுருகன் கூறியிருந்தார்.
அரிட்டாபட்டியில் பல்லுயிர்த் தலம் இருப்பதை அறிந்தே மத்திய அரசு ஏலம் விட்டதாகக் கூறிய துரைமுருகன், ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது குறித்து கூறுகையில், “மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்குத் தெரியும். அது ஒரு வீண் முயற்சி” என்றார்.
மதுரையில் திரண்ட விவசாயிகள்
“ஆனால் இந்த திட்டம் வந்தால் மேலூர் தாலுகாவை சுற்றியுள்ள 48 கிராமங்களில் விவசாயம் அடியோடு அழிந்துவிடும்” என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதனை எதிர்த்து பல்வேறு வகையான போராட்டங்களை மேலூர் தாலுகா மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம், கடையடைப்பு என்று பல்வேறு வழிகளிலும் போராட்டம் தொடர்கிறது.
ஏலத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்களும் பல்வேறு வர்த்தக அமைப்புகளும் அறிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) மேலூர் தாலுகாவில் முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் பேரணி நடத்தினர்.
அரிட்டாபட்டியில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரையிலான சுமார் 20 கி.மீ தூரத்துக்கு பேரணி நடைபெற்றது. இதை நடைபயண பேரணியாக நடத்துவது விவசாய அமைப்புகள் முதலில் முடிவு செய்திருந்தன.
ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததால் போராட்டக் குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல இடங்களில் காவல்துறையின் தடுப்பு அரண்களைத் தாண்டி விவசாயிகளும் பொதுமக்களும் பேரணியாக செல்ல முயற்சித்தனர். இதனைத் தடுக்க காவல்துறையின் வாகனங்கள் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டன.
“நடைபயணம் செல்ல அனுமதியில்லை, வாகனங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நீண்ட தூரப் பேரணி என்பதால் போராட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு குளிர்பானங்களையும் உணவுப் பொருள்களையும் சில வணிகர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
“எங்கேயும் போக மாட்டோம்”
போராட்டத்தில் பங்கேற்றிருந்த மக்களிடையே பேசிய போது, அவர்கள் ஒருவித கொந்தளிப்பான மனநிலையில் இருந்ததை உணர முடிந்தது.
“இந்த ஊரிலேயே தான் இருப்போம். இந்த மலையையும் ஊரையும் விட்டு எங்கேயும் போக மாட்டோம். அதையும் மீறி எங்களை விரட்டினால் ரோட்டை மறித்துப் போராட்டம் செய்வோம்” என்றார் நரசிங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள்.
இதே ஊரை சேர்ந்த உமாதேவி பிபிசி தமிழிடம் பேசும் போது, “பல்லுயிர்ப் பெருக்க தலமான அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு சுற்றியுள்ள மக்கள் எல்லோரும் ஊரை காலி செய்ய வேண்டிய நிலை வரும் என்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் எங்கே செல்வது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
“அழிக்க நினைக்கிறார்கள்”
“சுரங்க எல்லையை மறுஆய்வு செய்யுமாறு மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி புதிய திட்டம் வகுக்க உள்ளனர். எங்களுக்கு அதில் உடன்பாடில்லை” என்கிறார் நரசிங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லெனின்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த நிலத்தை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு எப்படி கொடுத்தார்களோ, அதை அப்படியே அடுத்த தலைமுறைக்கு நாங்கள் கொடுக்க வேண்டும். இந்த மலை தான் எங்கள் வாழ்க்கை” என்றார்.
இந்தப் பகுதியைச் சுற்றி அழகர் கோவில் மலை, கழிஞ்ச மலை உள்பட ஆறுக்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. “இவை பண்பாடு, கலாசாரம் சார்ந்தவை. இந்த மண்ணை ஆண்ட மன்னர்களும் அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்களும் காப்பாற்றிக் கொடுத்தனர். ஆனால் மத்திய அரசு அழிக்க நினைக்கிறது” என்கிறார் விவசாயி லெனின்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கை நினைவு கூர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய வல்லாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நெடுஞ்செழியன், “அணையைக் கட்டிய பிறகு தான் மேலூர் செழிப்படைந்தது. மனிதர்களை வாழ வைப்பதற்குத்தான் அரசாங்கம் உள்ளது. அறவழியில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதைப்போல எங்கள் போராட்டமும் வெற்றி பெறும்” என்றார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், மதுரை வழியாக சிவகங்கையை நோக்கி செல்கிறது. இந்த நீரைக் கொண்டு மேலூரில் விவசாயம் நடக்கிறது.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறுமா?
பேரணியின் நடுவே பிபிசி தமிழிடம் பேசியவாறே அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் குமுறல்களைத் தெரிவித்தனர். பேரணியாக வந்த மக்கள், மாலை 3 மணியளவில் மதுரை தமுக்கம் மைதானத்தில் குவியத் தொடங்கினர்.
தமுக்கம் மைதானத்தில் பிபிசி தமிழிடம் பேசிய ஏ.வல்லாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மனுகாந்தி, “ஐந்து தலைமறையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் மண்ணைத் தோண்டும் அதிகாரத்தை நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. எங்கள் ஊரையும் மலையையும் விட்டுவிடுங்கள். விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம்.” எனக் கூறிவிட்டு கண்கலங்கினார்.
“அரிட்டாபட்டியைப் போல மேலூர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துவிட்டால் பாதிப்பு வராது” எனக் கூறுகிறார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்காக பத்து ஆண்டுகள் விவசாயிகள் போராடினார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு காலம் கடத்தக் கூடாது” என்கிறார்.
மேலூர் தொகுதி எம்.எல்.ஏ சொல்வது என்ன?
இதே கருத்தை பிபிசி தமிழிடம் பேசிய மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெரியபுள்ளான் முன்வைத்தார்.
அவர் பேசும்போது, “ஏலத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அரிட்டாபட்டியை தவிர்த்து மற்ற பகுதிகளில் கனிமத்தை வெட்டி எடுக்க திட்டமிடுகின்றனர்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மேலூரில் எத்தனை ஆண்டுகள் சுரங்கம் தோண்டுவார்கள் எனத் தெரியாது. இந்தப் பணிகள் நடந்தால் மக்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்படும் என்பதால் அச்சப்படுகிறார்கள்” என்கிறார்.
மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் தான் பேசியுள்ளதாகவும் பெரியபுள்ளான் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் போராட்டம் நீடிப்பது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. “சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான முன்தயாரிப்புப் பணிகளில் இருப்பதால் அவரால் பேச இயலாது” என அவரது உதவியாளர் பதில் அளித்தார்.
“மேலூர் தாலுகாவில் அரிட்டாபட்டியைப் போல சுற்றியுள்ள 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்” என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.