மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை விசித்திரமான சம்பவங்கள் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் பதிவு செய்கின்றன. ஒரு முறை வடக்கு திசையிலிருந்து ஒரு தெய்வீகக் குழந்தை வருமென்றும் அது மக்களை மீட்குமென்றும் தகவல்கள் பரவின. இரண்டாவது, நிகழ்வு சற்று விபரீதமானதாக இருந்தது. இந்த இரு நிகழ்வுகளும் எப்படி நடந்தன? அதற்குப் பிறகு என்ன நேர்ந்தது?
மதுரையில் இருந்த சுல்தானகம், சிக்கந்தர் ஷாவின் வீழ்ச்சிக்குப் பிறகு சிதைந்துபோனது. சிக்கந்தர் ஷாவின் தோல்விக்குப் பிறகு கி.பி. 1371-இல் இருந்து விஜயநகர பேரரசின் பிரதிநிதிகள் மதுரையை ஆட்சிசெய்ய ஆரம்பித்தனர். பதினாறாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் விஸ்வநாத நாயக்கர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக மதுரையை ஆட்சிசெய்யத் துவங்கினார்.
அவரோடு சேர்த்து மொத்தம் 13 நாயக்க மன்னர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரை மதுரையை ஆட்சிசெய்தனர். இந்த 13 மன்னர்களில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் அவருடைய பேரனான சொக்கநாத நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் இந்த விசித்திர சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஜே.எச். நெல்சன் எழுதிய The Madura Country: A Manual நூல் விவரிக்கிறது.
பட மூலாதாரம், JH Nelson
மதுரையை ஆட்சி செய்த ஆறாவது நாயக்க மன்னராக இருந்தவர் முத்து வீரப்ப நாயக்கர். இவருக்கு சந்ததி இல்லாத காரணத்தால் அவருடைய தம்பியான திருமலை சேவரி நாயனி அய்யாலுகாரு என்ற திருமலைக்கு 1623-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டது. மதுரை நாயக்க மன்னர் மரபில் ஏழாவது மன்னராக இருந்த திருமலை மன்னர்தான், இந்த மரபிலேயே மிக புகழ் மிக்க மன்னராக பின்னாளில் உருவெடுத்தார். அவர் மன்னராக முடிசூடியபோது தலைநகரம் திருச்சியில் இருந்தது. சில ஆண்டுகளில் அதனை மதுரைக்கு மாற்றினார் திருமலை மன்னர்.
அவர் மன்னராக இருந்தபோது, கி.பி. 1653-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான, மர்மமான வதந்தி ஒன்று பரவ ஆரம்பித்தது. இதனால், நாடு முழுவதும் விளக்க முடியாத உணர்வெழுச்சி ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் எங்கிருந்து தோன்றுகின்றன என்றே தெரியாமல் இதுபோன்ற வதந்திகள் அவ்வப்போது பரவுவதும் பெரும் புத்திசாலிகள் மனதில்கூட கலக்கத்தை ஏற்படுத்துவதும் பிறகு, எதுவுமே நடக்காமல் ஓய்ந்துவிடுவதும் வழக்கம்தான்.
இந்த முறை, ஒவ்வொரு ஊராகச் சென்று கடவுளின் பெயரால் பாட்டுப்பாடி யாசகம் பெற்று வாழும் பிச்சைக்காரர்கள் இந்தச் செய்தியைப் பரப்பினர். அதாவது, ‘தெய்வீகப் பிறப்பெடுத்த ஒரு ‘குழந்தை அரசன்’ வடக்கிலிருந்து வரப்போகிறான். தற்போதுள்ள எல்லா அமைப்புகளையும் வீழ்த்திவிட்டு, அமைதியும் வளமும் சந்தோஷமும் மிகுந்த காலத்தை உருவாக்குவான்’ என்றார்கள்.
படக்குறிப்பு, திருமலை நாயக்கர் அரண்மனையில் இன்றும் எஞ்சியுள்ள ஒரு பகுதி
விரைவிலேயே இந்த வதந்தியை இந்துக்களின் எல்லாப் பிரிவினரும் நம்ப ஆரம்பித்தார்கள். யாராவது சற்று புத்திசாலித்தனத்தோடு இது குறித்து கேள்வியெழுப்பினால், இந்த வதந்தியை நம்பியவர்கள் அவர்களை பயமுறுத்தினார்கள். “இதை நம்பாததால் கடவுளின் கோபத்திற்கு ஆளாவாய்” என சபிக்கப்பட்டார்கள். விரைவிலேயே இந்தப் பிச்சைக்காரர்கள் பரப்பிய கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிட்டது. இந்தக் கதையை நம்புபவர்கள், இவர்களுக்கு காணிக்கைகளையும் அளிக்க ஆரம்பித்தனர். அந்தத் தொகையும் கணிசமாகச் சேர்ந்தது.
இதற்குச் சில காலத்திற்குப் பிறகு அந்தத் தெய்வீகக் குழந்தையும் அதன் தாயும் பெங்களூருக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனால் மதுரை நகரம் முழுவதும் பெரும் பரவசம் தொற்றியது. ஒவ்வொருவரும் அவர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டிருந்தனர். பல பாளையக்காரர்கள் இவர்களுக்குப் பெரும் காணிக்கையை அளிக்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே சொன்னார்கள்.
ஆனால், அப்படி யாருமே மதுரைக்கு வந்து சேரவில்லை. என்ன நடந்தது?
இந்த வதந்தியைப் பரப்பியவர்கள், உண்மையிலேயே ஒரு குழந்தையையும் தாயையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைக் கேள்விப்பட்டு, பல செல்வந்தர்கள், அரசப் பதவியில் இருந்தவர்கள் குழந்தையையும் தாயையும் சந்தித்து ஏகப்பட்ட செல்வத்தைக் காணிக்கையாகத் தந்தார்கள். ஆனால், எதிர்பாராத ஒரு விஷயமும் நடந்தது. அதாவது அந்தத் தருணத்தில் பெங்களூர் பகுதி பீஜப்பூர் சுல்தான் வசம் இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள், இந்தக் கும்பலிடமிருந்த செல்வத்தைப் பறித்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள். பக்தர்கள் யாரும் ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அங்கிருந்து ஓடிவிடும்படியும் எச்சரித்து விரட்டிவிட்டார்கள்.
பட மூலாதாரம், University of Madras
படக்குறிப்பு, பழங்கால மதுரை (கோப்புப்படம்)
இவ்வளவு நடந்தும்கூட, இந்த வதந்தியைப் பரப்பியவர்கள் மதுரையில் ஓய்ந்திருக்கவில்லை. கொல்லப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பிழைத்துவந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர் என்கிறார் ஜே.எச். நெல்சன். இந்த சம்பவத்தை ஒரு கடிதத்தின் அடிப்படையில் அவர் விவரித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் அந்தக் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தனது கணிப்பின்படி அது வீர போக வசந்த ராயராக இருக்கலாம் என்கிறார் ஜே.எச். நெல்சன். வீரபோக வசந்த ராயர் என்பவர் பிறந்து தங்களை மீட்பார் என்ற நம்பிக்கை 1860கள் வரை நிலவியதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
ஆனால், இந்த விசித்திரச் சம்பவம் குறித்து ஜே.எச். நெல்சனின் புத்தகம் மட்டுமே குறிப்பிடுகிறது. பல்வேறு நூல்களை அடிப்படையாகக் கொண்டு மதுரை நாயக்கர்களின் வரலாற்றை எழுதிய ஆர்.சத்தியநாத அய்யரின் ‘மதுரை நாயக்கர் வரலாறு’ நூலில் இந்த நிகழ்வு குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அதேபோல, இதே காலகட்டத்தைச் சேர்ந்த Oriental Historical Manuscripts-ம் இதைப் பற்றி ஏதும் கூறவில்லை.
இரண்டாவது சம்பவம் நடந்தது கி.பி. 1662-ஆம் ஆண்டில். அந்த காலகட்டத்தில் திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் மன்னராக இருந்தார். இந்த நிலையில்தான் மதுரை நாட்டில் பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கத் தொடங்கின.
“அந்தச் சம்பவங்கள் நகரவாசிகளின் மனதில் பெரும் பீதியை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் பிறந்த பல குழந்தைகள் நிறையப் பற்களுடன் பிறந்தன. ஓநாய்களும் கரடிகளும் புலிகளும் காட்டை விட்டு வெளியேறி சமவெளிப் பகுதியில் உலவ ஆரம்பித்தன. பல சமயங்களில் அவை தலைநகருக்கே வந்தன. அங்கிருந்த தேவாலயங்களின் வளாகங்களில் உலவின. பலர் எந்தக் காரணமுமின்றி திடீரென இறந்தனர்.”
“அதற்கு முன்பு பார்த்திராத பூச்சிகள் கொத்துக்கொத்தாக வானத்தில் பறந்தன. அவற்றில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அவை கடித்தால் மிக மோசமாக வலித்தது. இப்படி நடந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள், வரப்போகும் பேரழிவைச் சுட்டிக்காட்டுவதாகவே நகர மக்கள் கருதினார்கள். ஒவ்வொருவர் மனதிலும் அச்சமும் பதற்றமும் குடிகொண்டிருந்தது. காலராவும் பரவ ஆரம்பித்தது. ஒரே குடும்பத்தில் 15 நாட்களில் ஏழு பேர் இறந்து போனார்கள்.”
“மேலே சொன்ன நிகழ்வுகள் எல்லாம் தீய சகுனங்கள் என்று காட்டுவதைப் போன்ற சம்பவங்கள் அடுத்த ஆண்டில் நடந்தன. 1663-இல் பீஜபூர் சுல்தான் அடில் ஷாவின் படைகள் வானமியான் என்ற தளபதியின் தலைமையில் மதுரையை நோக்கிப் புறப்பட்டு திருச்சி கோட்டையை முற்றுகையிட்டன. ஆனால், மதுரைப் படைகள் வானமியானின் படைகளைக் கடுமையாகத் தாக்கி அழித்தன.”
“இதனால், ஆத்திரமடைந்த வானமியான் சுற்றியிருந்த ஊர்களைத் தாக்கி அழித்தான். இது பேரழிவை ஏற்படுத்தியது. பல ஊர்களில் மக்கள் ஒன்றாக நின்று தங்களைத் தாங்களே தீக்கிரையாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில், வானமியானுக்கு குறிப்பிட்ட தொகையை அளித்து, அவனைத் திருப்பி அனுப்பினார் சொக்கநாத நாயக்கர்” என்கிறது ஜே.எச். நெல்சனின் நூல்.
இந்த நிகழ்வை ஆர். சத்தியநாத அய்யரின் ‘மதுரை நாயக்கர் வரலாறு’ம் குறிப்பிடுகிறது. தவிர, இந்த விசித்திரமான சம்பவங்களுக்கான விளக்கத்தையும் இந்த நூல் அளிக்கிறது. அதாவது, 1962ஆம் ஆண்டுக்கு முன்பாக மதுரையிலும் தஞ்சையிலும் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருந்தது.
இந்தப் பஞ்சத்தின் தொடர்ச்சியாகவே காரணமில்லாத மரணங்கள், நோய்த் தாக்குதல்கள், பூச்சித் தாக்குதல்கள், குழந்தைகள் பிறக்கும்போதே பிரச்னைகளுடன் பிறப்பது ஆகியவை நடந்ததாகக் குறிப்பிடுகிறது இந்த நூல்.
“இந்தச் சம்பவங்கள் யாவுமே அநேகமாக போராலும் பஞ்சத்தாலும் ஏற்பட்டவைதான். ஆனால், மக்கள் மனதிற்குள் தேங்கிக் கிடந்த மூட நம்பிக்கையாலும் கற்பனையாலும் தங்கள் துரதிர்ஷ்டத்தால்தான் இவையெல்லாம் நடந்தது எனக் கருதினார்கள்.” என்கிறார் ஆர். சத்தியநாத அய்யர்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகே, தலைநகரை மதுரையிலிருந்து மீண்டும் திருச்சிக்கு மாற்றினார் சொக்கநாத நாயக்கர். அங்கு குடியிருப்புகளைக் கட்டுவதற்காக திருமலை நாயக்கர் மதுரையில் கட்டியிருந்த அரண்மனையையும் இடித்தார்.