பட மூலாதாரம், UGC
“இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்” எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி.
தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி.
ஆனால், ‘காவல்துறை கைது செய்துவிடுமோ?’ என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது.
இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினேஷ்குமார் மரணத்தில் என்ன நடந்தது? காவல்துறை மீது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
மதுரை அண்ணா நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டு யாகப்பா நகர் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் – முத்துலட்சுமி தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இவர்களின் மகன் தினேஷ்குமார், தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
“தினேஷ்குமார் மீது சில கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை” எனக் கூறுகிறார், ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.
பட மூலாதாரம், UGC
காவல்நிலையத்தில் என்ன நடந்தது?
“வியாழக்கிழமையன்று (அக்டோபர் 9) அதிகாலை சுமார் 4.30 மணிக்கு அண்ணா நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மற்றும் அடையாளம் தெரிந்த காவலர்கள் இரண்டு பேர் என்னுடைய வீட்டுக்கு வந்தனர்” எனக் கூறுகிறார், தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி.
“காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துவிட்டு ஒன்பது மணியளவில் அனுப்பிவிடுவதாகக் கூறி என் மகனைக் கூட்டிச் சென்றனர். என் கணவரும் உடன் சென்றபோது, ‘நீங்கள் வர வேண்டாம்’ என போலீஸார் கூறினர்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காலை சுமார் ஒன்பது மணியளவில் அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் சென்றுள்ளார். “அங்கு என் மகனைக் காணவில்லை” எனக் கூறுகிறார், முத்துலட்சுமி.
வழக்கறிஞர் ஒருவர் மூலமாக காவலர்களிடம் பேசியபோது, ‘ஸ்டேஷனுக்கு கூட்டி வருவார்கள். அங்கேயே காத்திருங்கள்’ எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்பிறகு தினேஷ்குமாரிடம் இருந்து வேல்முருகனுக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பற்றிக் கூறும் முத்துலட்சுமி, ” வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் வழக்கறிஞர் ஒருவரோடு வருமாறு என் மகன் கூறினார். ஆனால், அங்கே அவரது அப்பா சென்றபோது யாரும் இல்லை” என்கிறார்.
பட மூலாதாரம், UGC
வியாழக் கிழமையன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா தலைமையிலான போலீஸார், தினேஷ்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர். காவல் வாகனத்தில் காவல்நிலையம் வருமாறு அவரின் தாய் முத்துலட்சுமியிடம் கூறியுள்ளனர்.
“வாகனத்தில் ஏற்றும்போது, என் மகன் தப்பித்து ஓடிப் போய்விட்டதாக காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறினார். ‘அவன் அப்படி ஓடக் கூடிய ஆள் இல்லை’ எனத் தெரிவித்தேன். அவரோ, பீடி குடிப்பதற்கு அனுமதி கொடுத்தபோது ஓடிப் போய்விட்டதாகக் கூறினார்” என்கிறார், முத்துலட்சுமி.
தினேஷ்குமாரின் நிலை தொடர்பாக, அவரது வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோதும் இதே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மதியம் சுமார் 1 மணியளவில் தினேஷ்குமாரின் நிலை குறித்து அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
“காவல்நிலைய வாசலில் நின்றிருந்த என்னை உதவி ஆணையர் சிவசக்தி உள்ளே அழைத்தார். தப்பியோடும்போது கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் இறந்துவிட்டதாக அவர் கூறினார்” என்கிறார் முத்துலட்சுமி.
“அவரிடம், ‘ஆறடி உயரத்தில் உள்ள ஒருவர் எப்படி சாவார்?’ எனக் கேட்டேன். ‘எல்லோரும் சேர்ந்து கொன்றுவிட்டீர்களா?’ எனவும் சத்தம் போட்டேன். அங்கிருந்த காவலர்கள், என்னை வெளியில் தள்ளிவிட்டனர்” எனக் கூறி கதறியழுதார், முத்துலட்சுமி.
பட மூலாதாரம், UGC
போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
“வீட்டில் வைத்து தினேஷ்குமாரை அடித்து, உதைத்துதான் போலீஸார் கூட்டிச் சென்றனர். அதிகாலை நேரத்தில் எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறுகிறார், ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தினேஷ்குமாருக்கு நீச்சல் தெரியுமா என அவரது அப்பாவிடம் போலீஸார் கேட்டுள்ளனர். சுமார் 1.30 மணியளவில் வண்டியூர் பகுதியில் பீடி குடிக்க அனுமதி கேட்டு, தப்பியோடிவிட்டதாக ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறியுள்ளார். அதன்பிறகு கால்வாயில் விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்” என்கிறார்.
“தினேஷ்குமார் விழுந்து இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் வண்டியூர் கால்வாயில் அவரது அப்பா ஒரு குச்சியை வைத்துப் பார்த்துள்ளார். அங்கு முழங்கால் அளவுக்கு மட்டுமே நீர் இருந்துள்ளது. ஆனால், அங்கிருந்த குழியில் உள்ள சகதியில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது” எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ” வண்டியூர் பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் அகற்றியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் தினேஷ்குமாரின் தாய் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ தரப்பட வேண்டும்; சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும்; காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளதாக ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், UGC
சிபிசிஐடி விசாரணை கோரி மனு
இந்தநிலையில், போலீஸ் காவலில் தினேஷ்குமார் இறந்த தகவலைக் கேள்விப்பட்டு அவரின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட பலரும் அண்ணா நகர் காவல் நிலையம் எதிரில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, தினேஷ்குமாரின் தாயார் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தும் வகையில், 196 பிஎன்எஸ்எஸ் (inquiry by magistrate into the cause of death) பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“என் கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு என் மகனுக்கு வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தான். ஆனால், விசாரணை என்ற பெயரில் கொன்றுவிட்டார்கள்” எனக் கூறி அழுதார், முத்துலட்சுமி.
“அதிகாலை 4.30 மணிக்கு போலீஸார் வரவேண்டிய அவசியம் என்ன” எனக் கேள்வி எழுப்பும் ஹென்றி திபேன், “தினேஷ்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
காவல் உதவி ஆணையர் கூறுவது என்ன?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் சிவசக்தி மறுக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” காவல்நிலையத்துக்கு தினேஷ்குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, பீடி குடிப்பதற்கு அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுத்தபோது அங்கிருந்து ஓடிவிட்டார். அதற்குரிய சிசிடிவி காட்சிகள் உள்ளன” எனக் கூறுகிறார்.
சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் சிவசக்தி, “தினேஷ்குமார் தப்பி ஓடுவதை பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர். அவர்களும் தினேஷ்குமாரை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர்” என்கிறார்.
“நெடுஞ்சாலையில் அவர் ஓடியதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. இதை அவரது பெற்றோரிடம் கூறினோம். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை” எனக் கூறுகிறார், உதவி ஆணையர் சிவசக்தி.
தினேஷ்குமார் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, “அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இதுதொடர்பான விவரங்கள் தெரியவரும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘அவர் குற்றவாளி அல்ல.. காரணம் இதுதான்’
தொடர்ந்து பேசிய உதவி ஆணையர் சிவசக்தி, ” தீபாவளி, தேவர் ஜெயந்தி வருவதால் குற்றப் பின்னணி உள்ளவர்களை அழைத்து, நன்னடத்தையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதற்காகவே மூன்று பேரையும் அழைத்து வந்தோம்” என்கிறார்.
“தினேஷ்குமார் தப்பியோடும்போது நடந்த சம்பவங்களை நீதித்துறை நடுவரிடம் உடன் வந்த மற்ற இருவரும் கூறியுள்ளனர். தினேஷ்குமாருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ‘போலீஸ் கைது செய்தால் சிக்கல் வரலாம் என்பதால் அவர் ஓடியிருக்கலாம். மற்றபடி அவர் குற்றவாளி அல்ல” எனவும் உதவி ஆணையர் சிவசக்தி தெரிவித்தார்.
“கால்வாயில் குறைவான நீர் உள்ளதால் அதில் விழுந்து இறப்பதற்கு வாய்ப்பில்லை எனக் கூறுகிறார்களே?” என அவரிடம் கேட்டபோது, “தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு