மதுரை: மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் களப்பணி திமுக தொண்டர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், இத்தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகரைச் சேர்ந்த மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இத்தொகுதியில் 3 முறை தொடர் தோல்வியை சந்திக்கும் திமுக, வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதே.
மாநகரை 2 மாவட்டமாகப் பிரித்து புதிதாக ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படு வார் என எதிர்பார்த்த நிலையில், ஒரு தொகுதியை மட்டும் பிரித்து மூர்த்தியிடம் ஒப்படைத்தது மாநகர் நிர்வாகிகளிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகர் ஒட்டுமொத்த திமுகவினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. 3 முறை தொடர்ந்து தோல்வியை சந் தித்த திமுக, அமைச்சர் மூர்த்தியிடம் தொகுதியை ஒப்படைத்ததுமே வெற்றி பெற்றுவிடுமா, இது என்ன மாயாஜாலமா? என்ற கேள்வி திமுகவினரிடம் மட்டு மின்றி அதிமுகவினரிடையேயும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பு கிடைத்த 10 நாட்கள் இத்தொகுதியில்தான் கடுமையான களப்பணியை மூர்த்தி ஆற்றியுள்ளார். இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அத்தொகுதியைச் சேர்ந்த கட்சியினர் கூறியதாவது:

மேற்குத் தொகுதியைச் சேர்ந்த மாநில இளைஞரணி துணைச் செய லாளர் ஜி.பி.ராஜா: அமைச்சர் மூர்த்தி களப்பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே என தமிழக முதல்வரால் பாராட்டுப் பெற்றவர். அவரை நம்பி ஒப்படைத்தால் சிறப்பாக செய்து முடிப்பார். அடிமட்டத் தொண்டர்களோடு தோளோடு தோள் கொடுத்து இறங்கி வேலை பார்ப்பார். இதனால் இத்தொகுதிக்குட்பட்ட பழைய, புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் களம் இறங்கியுள்ளனர். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந் துள்ளனர்.
பெத்தானியாபுரம் பகுதிச் செயலாளர் மதி வெங்கடேஷ்: மூர்த்தியின் நியமனத்தால் திமுகவினரிடையே புதிய எழுச்சி காணப்படுகிறது. கட்சியினரை ஒன்றிணைத்து, அரவணைத்துச் சென்று பணிகளை மேற்கொள்வதில் அனுபவம் மிக்கவர். இந்த களப்பணியை மேற்கு தொகுதியில் காட்டுவதால் திமுகவின ரிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதை வெற்றி வரையில் கொண்டு செல்வார் மூர்த்தி என்பது உறுதி.
தலைமை செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம்: தொகுதி மக்களின் முக்கிய தேவைகள் குறித்த பட்டியலை அமைச்சர் கேட்டு பெற்றுள்ளார். முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி அதிமுக ஆதரவு பெற்ற பகுதிகளை திமுகவுக்குச் சாதகமாக மாற்றுவார். அவரது செயல்பாட்டை அறிந்து தொண்டர்கள் முழு மூச்சாக வேலையில் இறங்கியுள்ளனர். இது வெற்றியை தரும்.
திமுக தொண்டர் மு.மனோகரன்: மேற்கு தொகுதியின் பொது உறுப்பினர் கூட்டம் திமுக மாநாடு போல் நடந்தது. கட்சியினருக்கு வரவேற்பு, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தங்கள் வீட்டு உறவினரைப்போல் செய்து கொடுத்தார் மூர்த்தி. அவரின் தனித்துவமே இதுதான். யாரிடமும் பாரபட்சம் காட்டமாட்டார்.
தொகுதியின் இந்நாள், முன்னாள் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் என ஒருவரைக்கூட ஒதுக்காமல் அனைவரையும் தன் இல்ல விழாவாக கருதி அழைத்தார். அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்று மூர்த்தியின் பணியை பாராட்டினார். இத்தகைய களப்பணி, ஒருங்கிணைப்பை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இதுவே இத்தொகுதியில் திமுக வெற்றிக்கான முதல்படி. செல்லூர் ராஜூ மட்டுமல்ல. வேறு யார் நின்றாலும் வெற்றி பெறுவோம்.

ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.ஜெயராமன்: தொண்டர்களின் உழைப்பே கட்சி பணிக்கு முக்கியம். அதை எப்படி பெற வேண்டும் என்பது மூர்த்திக்கு நன்றாக தெரியும். கட்சியினரை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய விடமாட்டார். விருந்து, வாகனம் என அனைத்தையும் தானே செய்து, உழைப்பு, உண்மையை மட்டும் எதிர்பார்ப்பார். கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகளில் மட்டுமே அதிமுக வென்றது. இதை மாற்றுவது மூர்த்திக்கு பெரிதல்ல.மேற்கு தொகுதியில் மூர்த்தியின் பணிகளை மாநகர் அதிமுக மட்டுமின்றி மற்ற தொகுதி திமுக நிர்வாகிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.