படக்குறிப்பு, மதுரோ (வட்டத்தில் இருப்பவர்) கட்டுரை தகவல்
எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
பதவி, பிபிசிக்காக
“ஆம்.. மதுரோ சத்ய சாயி பக்தர் தான். நிக்கோலஸ் மதுரோ மற்றும் சிலியா புளோரஸ் (அவரது மனைவி) ஆகியோர் 2005-ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயிபாபா ஆசிரமத்திற்கு வந்து பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்” என்று புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர் பிபிசியிடம் தெரிவித்தார்.
வெனிசுவேலா தலைநகர் கராகஸ் மீது ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை சிறைபிடித்தன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பிறகு வெனிசுவேலா துணை அதிபர் தற்போது அதிபராக பதவியேற்றுள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த காலத்தில் மதுரோ ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்திக்கு வந்து சத்ய சாயிபாபாவைத் தரிசித்தது இந்தியாவில் விவாதமாக மாறியுள்ளது.
“நிக்கோலஸ் மதுரோ புட்டபர்த்தி சாயிபாபாவைத் தரிசித்தது உண்மைதான்” என்று ரத்னாகர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
”நிக்கோலஸ் மதுரோ மற்றும் சிலியா புளோரஸ் 2005-இல் புட்டபர்த்தி சத்ய சாயிபாபா ஆசிரமத்திற்கு வந்து பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். இங்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் வருவார்கள். அந்த வெளிநாட்டு பக்தர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தாலொழிய நமக்குத் தெரியாது.”
“மதுரோ வந்த சமயத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் பாபாவை உள்ளே சென்று சந்தித்ததாகத் தெரிகிறது. அவர்கள் கோரிக்கை விடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த ஒரு புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது” என்று ரத்னாகர் விளக்கினார்.
“வெனிசுவேலாவிலும் பாபா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அங்கு மட்டுமல்ல… உலக நாடுகளில் பாபாவின் பெயரில் பல ஆசிரமங்கள் உள்ளன. அவை அனைத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.”
“அவர் சத்ய சாயிபாபாவின் பக்தர். பாபாவின் போதனைகளைப் பின்பற்றுபவர். மதுரோ தனது மாளிகையில் சத்ய சாயிபாபாவின் புகைப்படத்தை வைத்துள்ளதாகக்கூட எங்களுக்குத் தெரிய வந்தது” என்று ரத்னாகர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், satyasai.org
படக்குறிப்பு, சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்ட் இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் விவரங்களின்படி, ரோட்ரிக்ஸ் 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 அக்டோபர் மாதங்களில் புட்டபர்த்திக்கு வந்துள்ளார்
வெனிசுவேலா அதிபரும் கூட…
தற்போதைய வெனிசுவேலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸும் சத்ய சாயி பக்தர்தான் என்று ரத்னாகர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் துணை அதிபராக இருந்தபோது புட்டபர்த்திக்கு வந்து சத்ய சாயிபாபாவின் மகா சமாதியைத் தரிசித்ததாகத் தெரிவித்தார்.
அவர் சத்ய சாயிபாபாவின் சமாதியைத் தரிசிக்கும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்ட் இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் விவரங்களின்படி, ரோட்ரிக்ஸ் 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 அக்டோபர் மாதங்களில் புட்டபர்த்திக்கு வந்து, பிரசாந்தி நிலையத்தில் உள்ள சமாதி கோயிலில் சாயிபாபாவின் சமாதியைத் தரிசித்தது தெரிய வந்துள்ளது.
பட மூலாதாரம், satyasai.org
ரோட்ரிக்ஸ் 2024 அக்டோபர் 26 அன்று புட்டபர்த்திக்கு வந்தபோது அவர் வெனிசுவேலா துணை அதிபராக இருந்ததாக சத்ய சாயி டிரஸ்ட் வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரிய வருகிறது. அந்தச் சமயத்தில் அவருடன் இந்தியாவில் உள்ள வெனிசுவேலா தூதர் கபாயா ரோட்ரிக்ஸ் கன்சால்வேஸும் வந்திருந்ததாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ஆர்.ஜே. ரத்னாகர் வரவேற்றார். 2023-இல் டெல்சி ரோட்ரிக்ஸ் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்தபோது புட்டபர்த்தி சென்றுள்ளார். அது அவரது தனிப்பட்ட பயணம் என்று அப்போது கூறப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
மதுரோவை அமெரிக்கா ஏன் கைது செய்தது?
இடதுசாரி அதிபர் ஹியூகோ சாவேஸ் மற்றும் வெனிசுவேலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிக்கோலஸ் மதுரோ அதிகாரத்திற்கு உயர்ந்தார். கடந்த காலத்தில் பேருந்து ஓட்டுநராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றிய மதுரோ, சாவேஸிற்குப் பிறகு 2013 முதல் அதிபராக இருந்து வருகிறார்.
2024-இல் நடந்த அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எதிர்கட்சிகள் இதனை ஏற்கவில்லை.
மதுரோ ஒரு குற்ற கடத்தல் அமைப்பை வழிநடத்துவதாக அமெரிக்கா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது, ஆனால் அவர் அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.
கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என தான் அழைக்கும் குழுவை அமெரிக்கா வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இது வெனிசுவேலாவில் உள்ள சில செல்வாக்கு வாய்ந்தவர்களை குறிக்க அமெரிக்கா பயன்படுத்தும் பெயர்.
போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத சுரங்கத் தொழில் போன்ற சட்டவிரோத செயல்களை இந்தக் குழு ஒருங்கிணைக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
மதுரோ இப்போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்கிறார்.