• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

மது அருந்தி இருக்கிறீர்களா என்று கேட்ட சிறுபான்மையினர் ஆணைய தலைவரை கண்டித்து பவுத்த பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் | Buddhist representatives protest against the Minorities Commission chairman in nagapattinam

Byadmin

Apr 12, 2025


நாகப்பட்டினம்: மது அருந்திவிட்டு வந்திருக்கிறீர்களா? என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் கேட்டதாகக் கூறி, அவரைக் கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவுத்த பிரதிநிதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆணையத் தலைவர் ஜோ அருண் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாகை எஸ்.பி. அருண் கபிலன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பயனாளிகள் 100 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆணையத் தலைவர் ஜோ அருண் வழங்கினார். அதைத்தொடர்ந்து, நாகையில் உள்ள சூடாமணி விகாரை பவுத்த சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருணிடம் தஞ்சை மண்டல பவுத்த சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர், கூட்டம் முடிந்து புறப்பட்டபோது, பவுத்த குழுவைச் சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்டோர் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருணிடம் சென்று பேசினர்.

அப்போது, ஜெயராமனின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவாறு, ‘‘என்ன ட்ரிங்க்ஸ் போட்டுட்டு(மது அருந்திவிட்டு) வந்துள்ளீர்களா?’’ என ஜோ அருண் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பவுத்த சங்கத்தினர் அவரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, ஜோ அருண் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.

பின்னர், பொதுவெளியில் தங்களை அவதூறாக பேசிய ஜோ அருண் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என பவுத்த சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பின்னர், போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



By admin