பட மூலாதாரம், Getty Images
மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்திலுள்ள ராம்பூர் பாகேலான் பகுதியில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில் பாஜக தலைவர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வது, தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் மிரட்டல் விடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த பாஜக தலைவரின் பெயர் அசோக் சிங்.
அந்த வீடியோவில், தான் நடத்தப்பட்ட விதம் பற்றி புகார் அளிக்கப் போவதாக அந்தப் பெண் கூறும்போது, “எனக்கு என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, வீடியோவை சமூக ஊடகங்களில் போடு” என்று அசோக் சிங் பதிலளிப்பது கேட்கிறது.
அந்த வீடியோவில் அந்தப் பெண் அழுதுகொண்டே புகார் அளிக்கப் போவதாகக் கூறுகிறார்.
இது தொடர்பாக சத்னா காவல்துறை பிபிசியிடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட அசோக் சிங் டிசம்பர் 28 -ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தது.
அசோக் சிங் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தற்போதுள்ள வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சத்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சிங்கின் அலுவலகத்தில் டிசம்பர் 22-ஆம் தேதி புகார் அளித்தார்.
காவல் கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சிங், ஐந்து நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 27 இரவு 10:47 மணிக்கு இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், “இந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது.” என்றார்.
வழக்குப் பதிவு செய்ய ஐந்து நாட்கள் ஆனது ஏன்?
பட மூலாதாரம், AMIT SINGH
வழக்குப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து எஸ்பி-யிடம் கேட்டபோது, “எஸ்பி அலுவலகத்திலா எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“உங்களுக்கு எதிராக யாராவது முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் அளித்தால், உடனே நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிடுவோமா? அந்தப் பெண் இன்று காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார், அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது,” என்று கூறிவிட்டு அவர் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இரவு நேரத்தில் காவல்துறை கூறுகையில், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் ராம்பூர் பாகேலான் காவல் நிலையத்தில் அசோக் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமான சைகைகள் செய்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பாலியல் சீண்டல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் புகாரில் கூறப்பட்டுள்ளன.”
“பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.
வைரலான வீடியோ தொடர்பாக அந்தப் பெண் கூறுகையில், அசோக் சிங் நவம்பர் 11 முதல் டிசம்பர் 27 வரை பலமுறை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும், அவற்றைச் சில நேரங்களில் தனது கைப்பேசியில் பதிவு செய்ய முடிந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசி தரப்பில் அசோக் சிங்கின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரது மருமகன் விஷ்ணுபிரதாப் சிங் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “புகார் அளிக்கும் பெண் எங்களது இடத்திலேயே மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் வாடகை செலுத்தவில்லை. அன்று வாடகை குறித்துப் பேசவே மாமா அங்கு சென்றார். ஆனால் அவர் மது அருந்தியிருந்தார், அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை,” என்றார்.
பட மூலாதாரம், Amit Singh
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் நாட்டின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 32,342 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சத்னா விவகாரத்தில், டிசம்பர் 22 அன்று எஸ்பி-யிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.
அசோக் சிங் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த நேரத்தில் ஆபாச வீடியோ எடுத்ததாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை வைரல் செய்துவிடுவேன் என்றும், குடும்பத்தைக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியதால் தான் அமைதியாக இருந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ஐந்து நாட்களாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்துக் கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
டிசம்பர் 20 அன்று அசோக் சிங் மீண்டும் தன்னிடம் வந்து வீடியோவை வைரல் செய்வதாக மிரட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி பெற்றுள்ள ஆவணங்களின்படி, அசோக் சிங் மீது ஏற்கனவே 8 வழக்குகள் உள்ளன.
1996 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், ஆபாசமான செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்னா முன்னாள் ஆட்சியர் அனுராக் வர்மாவின் 2024-ஆம் ஆண்டு உத்தரவுப்படி, அசோக் சிங்கின் குற்றப் பின்னணி குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், அதே உத்தரவில் இடம்பெற்றுள்ள குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி அவர் ராம்பூர் பாகேலானின் தற்போதைய எம்.எல்.ஏ விக்ரம் சிங்கின் உறவினர் என்பதும் தெரியவருகிறது.
மக்களவைத் தேர்தல் நடைமுறையின் போது, அசோக் சிங் சட்டம் ஒழுங்கைப் பாதித்து பொதுமக்களிடையே அச்சமான சூழலை உருவாக்கக்கூடும் என்றும் அனுராக் வர்மாவின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராகப் பல வகையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பழைய வழக்குகள் குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “அசோக் சிங் குற்றம்புரிவதை வழக்கமாக கொண்டுள்ளவர். அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் பின்னணி காரணமாக இதுவரை அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்றார்.
பாஜக குற்றவாளியைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், @jitupatwari
மத்திய பிரதேசத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்தச் சம்பவத்தின் வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, பாஜக குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், ஆளும் பாஜகவோ அல்லது மாநில அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜித்து பட்வாரி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளதாவது: “சத்னாவில் பாஜக தலைவர் அசோக் சிங் ஒரு பெண்ணைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், வீடியோ எடுத்துள்ளார், பின்னர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்…”
“நீங்கள் அரசு நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸா நடத்துகிறீர்களா? உங்கள் கட்சியின் தலைவர்கள் மாநிலத்தின் மகள்களிடம் இத்தகைய அருவறுப்பான செயல்களில் ஈடுபடுவதும், ஆறு மாதங்களாக உங்கள் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் என்ன மாதிரியான வேடிக்கை? இந்த மெத்தனப் போக்கினால்தான், அந்த பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் மீண்டும் தவறான செயலைச் செய்ய வந்துள்ளார்…” என முதல்வர் மோகன் யாதவிடம் ஜித்து பட்வாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
டிசம்பர் 27-ஆம் தேதி சத்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து முதல்வரோ அல்லது பாஜகவோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
டிசம்பர் 26-ஆம் தேதி இரவு, சத்னா மாவட்டத்திலேயே மற்றொரு பெண் நீதி கேட்டு இரவு முழுவதும் எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் மீது நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு