சேலம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து சேலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை சந்திப்பில் மாநகர செயலாளர் ரகுபதி தலைமையில் பெண்கள் சிலர் உள்ளிட்ட திமுகவினர் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திரண்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து, எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்த திமுகவினர், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, நாவடக்கம் தேவை என்றுகூறி முழக்கங்களை எழுப்பினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் புகைப்படம் அடங்கிய தாளினை கிழித்துப் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென உருவப் பொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.