சென்னை: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர், துணை முதல்வர், நூலகர் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), நிர்வாகப் பணியாளர், நிதி அதிகாரி, பொறியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் என ஆசிரியர் அல்லாத பிரிவில் வருகின்றன.
இவற்றில் சேர விரும்புவோர் kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிச. 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும்.
தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்த பள்ளிகளில், மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகளே அதிகம் சேர்க்கப்படுகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் போதியளவு பள்ளிகள் இல்லை, காலி பணியிடங்களும் அதிகமாகஇருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டு புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.