கோவை: “தமிழக கல்வித்துறை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய கோடிக்கணக்கான நிதியை செலவு செய்தது தொடர்பான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இதை மறைத்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிப்பது, கழிப்பிட வசதி இல்லாதது, ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரபப்படாதது உள்ளிட்ட பல்வேறு அவலங்கள் உள்ளன.
தேர்தலின் போது ஆசிரியர்களுக்கு திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. 4.5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதுகுறித்து கேள்விகள் எழுப்பும் போது, மத்திய அரசு பணம் வழங்குவதில்லை என்ற ஒற்றை வார்த்தையை கூறி சமாளித்து வருகின்றனர்.
மத்திய அரசு இதுவரை இல்லாத அளவிற்கு பல கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்திய நடவடிக்கைகளுக்கான ரசீது கேட்டால் வழங்குவதில்லை. அவற்றை வழங்கினால் தான் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உண்மை நிலை இவ்வாறு இருக்க வேண்டுமென்று மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று வழக்கமான பல்லவியை பாடி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக சட்ட ஆலோசகர்களை கொண்டு நீதிமன்றத்தில் தகுந்த முறையில் வழக்கை நடத்த வேண்டியது அரசின் கடமை. அதைவிடுத்து நீதிமன்றத்தை காரணமாக தொடர்ந்து எத்தனை நாட்கள் கூறி வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவத்தார்.