நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
”பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ 2,000 கோடி நிதி, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத ஒரு கொள்கையை பின்பற்றாததால், எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காது என்ற வாக்குறுதியை ஒன்றிய அரசு அளிக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
‘தமிழ்நாடு யு டர்ன் அடித்துவிட்டது’ – மத்திய அமைச்சர்
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்” என்றார்.
“இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.” என்று பேசினார்.
மேலும்,”அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை, நேர்மையாக இல்லை, ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை, அவர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.” என தெரிவித்தார்.
மேலும், “பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
‘தேசிய கல்விக் கொள்கையை திமுக ஒப்புக் கொள்ளவில்லை’ – கனிமொழி
பட மூலாதாரம், PTI
அவை மீண்டும் கூடிய போது பேசிய திமுக எம் பி கனிமொழி, மத்திய கல்வி அமைச்சர் தமிழக எம்.பி.க்களை, தமிழக அரசை நாகரீகமற்றவர்கள் கூறியதாக சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த போது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, அதிலுள்ள மும்மொழி கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தோம். தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திமுக கூறவில்லை” என்று கனிமொழி பேசினார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தான் அந்த வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது என்றார். “எனது வார்த்தைகள் காயப்படுத்தும் வகையில் இருந்திருந்தால் நான் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.
“எனினும் முக்கியமான விசயம் இதுதான். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கனிமொழி தலைமையில் மாநில கல்வி அமைச்சருடன் வந்து என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார்.
உடனே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், “நீங்கள் அமைதியாக இருங்கள். உண்மையை கேட்பதற்கான தைரியம் உங்களுக்கு வேண்டும்” என்று கூறிவிட்டு “எனக்கு கிடைத்த தகவல்படி தமிழக முதல்வர் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்குள் ஏதோ சில உள்விவகாரம் எழுந்தது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்” என்றார்.