8
மத்திய கிழக்கில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, அங்குள்ள சுமார் 200,000 இங்கிலாந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரியளவிலான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நடத்திய தாக்குதல்கள் இங்கிலாந்து பிரஜைகள் தங்கியிருக்கும் விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களைப் பாதித்துள்ளதாக பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அங்குள்ள ஆடம்பர ஹோட்டல்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன.
டுபாய் மற்றும் தோஹா வழியாகப் பயணம் செய்யும் இங்கிலாந்து பிரஜைகள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ளவர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அரசாங்கம் முதன்முறையாக ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தகைய ஒரு பெரிய நெருக்கடி கால மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
இதுவரை 94,000க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பிரஜைகள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். விமானப் போக்குவரத்துப் பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சாத்தியமான திட்டங்களை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
இந்த மோதலில் இங்கிலாந்து நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக அதன் விமானங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. கத்தாரில் இருந்து இயக்கப்பட்ட RAF டைபூன் போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளது.
சனிக்கிழமை காலை நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய இராணுவம் தெஹ்ரானின் மையப்பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதுவரை இங்கிலாந்து பிரஜைகள் யாரும் இந்த மோதலில் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.