இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார்.
மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட கால தொழில் வளர்ச்சியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் வலுவாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
எதிர்பார்ப்புகளும் சவால்களும்
பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க அரசு என்ன நடவடிக்கைகளை அறிவிக்கப் போகிறது என்பதில்தான் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.
நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற சவால்களை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில், பொதுமக்கள், தொழில் துறையினர் எனப் பல்வேறு தரப்புகள் மத்தியிலும் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, வருமான வரியில் அதிக விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை நடுத்தர மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
அதேபோன்று, எரிசக்தி விலை உயர்வு, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவையும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரச்னைகளாக உள்ளன.