மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் கிராமத்தில் நவம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட தண்ணீர் தகராறில் தலித் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இறந்த நாரத் ஜாடவின் சகோதரரின் புகாரின் பேரில், எட்டு பேர் மீது கொலை மற்றும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஷிவ்புரி மாவட்ட கூடுதல் எஸ்பி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தேடி வரும் நபர்களின் வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. இந்த விவகாரத்தில் ஊர் மக்கள் எதுவும் சொல்லத் தயாராக இல்லை.
என்ன நடந்தது?
28 வயதான நாரத் ஜாடவ் தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றிருந்தார் என்றும் செவ்வாய்கிழமை மாலை அருகில் உள்ள போர்வெல்லில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச குழாயை பொருத்தச் சென்றார் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது தாய்வழி தாத்தா தங்களின் தாய்க்கு தனது நிலத்தில் பங்கு கொடுத்திருந்தார் என்றும் அதில் தாங்கள் விவசாயம் செய்து வந்ததாகவும் நாரத்தின் சகோதரர் ராஜ்குமார் கூறினார்.
அந்த நேரத்தில் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதம் தாகட்டின் மகன் அவதேஷ் தாகட் என்ற நிக்கியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் அது விரைவில் கைகலப்பாகவும் சண்டையாகவும் மாறியது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவதேஷ் தாகட்டுடன் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் நாரத்தைத் தாக்கினர், பின்னர் அவரை வயல் வெளியிலேயே கட்டைகளால் அடித்தனர்.
இந்தர்கர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் கலந்த அமைதி நிலவுகிறது.
நாரத்தின் தாய் மாமா வீட்டில் பெண்கள் மட்டுமே உள்ளனர். வீட்டு ஆண்கள் நாரத்தின் இறுதிச் சடங்குகளுக்கு சென்றிருந்தனர். நாரத்தின் வீட்டிற்கு வெளியே பெண்கள் கூட்டம் கூடியுள்ளது.
அவருடைய தாய் பேசும் நிலையில் இல்லை, வீட்டிலிருந்த மற்ற பெண்களும் எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர்.
இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன.
கிராமத்திலிருந்த மற்றவர்களும் இந்த விஷயம் தொடர்பாக எதுவும் பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
சாலைகளில் வாகனங்களோ, ஆட்களோ காணப்படவில்லை. நாலாபுறமும் காவல்துறையினர் நிற்பதை பார்க்க முடிகிறது. வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் கூறுவது என்ன?
இந்த வழக்கில், கொலை மற்றும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“இறந்த நாரத் ஜாடவின் சகோதரரின் புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டபோது நாரத் மோசமாக தாக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாக அவர் இறந்தார் என்றும் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் சொல்கின்றன. இந்த வழக்கில் நாங்கள் இதுவரை பஞ்சாயத்துத் தலைவர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளோம்,” என்று ஷிவ்புரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஞ்சீவ் முலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் இருந்து எந்தக் கருத்தையும் பிபிசியால் பெற முடியவில்லை. ஏனெனில், அவர்களின் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘பொது பயன்பாட்டுக்காக இருந்த ஆழ்துளை கிணறு’
பல ஆண்டுகளுக்கு முன்பு நாரத்தின் தாய் மாமா வீட்டுக்கு அருகில் பொது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதில் இருந்து அவரது குடும்பத்தினரும், பஞ்சாயத்துத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் தண்ணீரை எடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தினர் என்று நாரத்தின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆழ்துளை கிணறு தனது தாய்வழி தாத்தா மற்றும் பஞ்சாயத்துத் தலைவரின் தந்தையின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டதாகவும், அதற்கான பணத்தில் பாதியை தனது தாய்வழி தாத்தா கொடுத்ததாகவும் ராஜ்குமார் கூறுகிறார்.
மூன்று சகோதரர்களில் மூத்தவரான நாரத், செவ்வாய்க்கிழமை தனது தாய் மாமாவின் கிராமத்திற்கு தனது தாயுடன் வந்திருந்தார். இங்கு வந்து பார்த்தபோது, பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது தாய் மாமா குடும்பத்திற்கு தண்ணீர் வழங்க மறுப்பது தெரியவந்தது.
“மாமா வீட்டுக்கு அண்ணன் வந்தபோது, ’பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்தார் தண்ணீர் எடுக்க விடாததால் வயலுக்குப் பாசனம் செய்ய முடியவில்லை’ என்று எங்களின் அண்ணி நாரத்திடம் கூறியுள்ளார்,” என்று ராஜ்குமார் கூறினார்.
“தண்ணீர் பொது பயன்பாட்டுக்கானது என்பதால், பைப்பை இணைக்க அண்ணன் நினைத்தார். குழாயை செருக அண்ணன் சென்றதும் பஞ்சாயத்துத் தலைவரின் மகன்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். முதலில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை அடிக்க ஆரம்பித்தனர்.”
“பஞ்சாயத்துத் தலைவரின் மகன் நிக்கி என்கிற அவதேஷ் தாகட், நாரத்தின் தாய் மாமாவின் குடும்பத்தை பண்ணையில் உள்ள கிணற்றில் குழாயை இணைக்க அனுமதிக்கவில்லை” என்று ராஜ்குமார் ஜாடவின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.
“சிறிது நேரம் கழித்து நாரத் ஜாடவ், தாய் மாமன் மகன் ராம்வீர், அத்தை ரச்சனா மற்றும் ரவீனா ஜாடவ் ஆகியோர் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டின் பின்புறம் உள்ள பண்ணையில் போடப்பட்டுள்ள போர்வெல்லுக்குச் சென்றனர்.”
“பஞ்சாயத்துத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆழ்துளை கிணற்றை தொடக்கூடாது என்று கூறினர். அப்போது, நாரத் ஜாடவ் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆழ்துளை கிணற்றில் தங்கள் குடும்பமும் பணம் முதலீடு செய்துள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றில் இணைப்பை ஏற்படுத்த உரிமை உள்ளதாகவும் கூறினர்.”
“ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க நாரத் மற்றும் அவரது குடும்பத்தினர் முயன்றபோது பஞ்சாயத்துத் தலைவர் அவரது குடும்பத்தினர், நாரத் ஜாடவை கொல்லும் நோக்கத்தில் அடிக்கத் தொடங்கினர்.”
பாதிக்கப்பட்டவரின் குடும்பம் என்ன சொல்கிறது?
“முன்பு ஆழ்துளை கிணறு பகிரப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பஞ்சாயத்துத் தலைவரின் குடும்பத்தினர் எங்களை தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சொல்லி வந்தனர்,” என்று நாரத்தின் அண்ணி சாந்தினி ஜாடவ் கூறினார்.
“இதுதொடர்பாக, அவ்வப்போது வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன, ஆனால், அது சண்டையாகவோ அல்லது வன்முறையாகவோ மாறவில்லை.”
“பஞ்சாயத்துத் தலைவரின் மகன் முதலில் தம்பியை வயலில் வைத்து அடித்தார். பிறகு அவனுடைய கடைக்குள் ஷட்டரை மூடியபடி அடித்தார். நாங்கள் அங்கு சென்றடைவதற்குள் அவனுடைய உயிர் பிரிந்துவிட்டது,” என்று இறந்தவரின் சகோதரரான ராஜ்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
மூன்று சகோதரர்களில் மூத்தவரான நாரத் டிரக் டிரைவராக இருந்தார். சம்பவத்திற்கு ஒரு நாள் முன்புதான் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார்.
“இச்சம்பவம் நடப்பதற்கு ஒருநாளைக்கு முன்புதான் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தான். ‘களைப்பாக இருப்பாய்.. எனவே இப்போதே போகவேண்டாம்’ என்று நான் சொன்னேன். ஆனால், சொல்வதை கேட்காமல் தாயுடன் தனது தாய் மாமா வீட்டிற்குச் சென்றான்,” என்று இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நாரத்தின் தந்தை விஷ்ணு ஜாடவ் குறிப்பிட்டார்.
“அவன் இங்கிருந்து சென்ற சில மணி நேரம் கழித்து என் மருமகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நாரத் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே என் இளைய மகனை இங்கிருந்து அனுப்பினேன். நாரத் இறந்துவிட்டான் என்று அங்கு சென்றபோது எங்களுக்குத் தெரிய வந்தது,” என்று நாரத்தின் தந்தை தெரிவித்தார்.
உடலை தகனம் செய்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டிருந்த ராஜ்குமார், “மாமாவின் குடும்பத்தை அண்ணன் மிகவும் நேசித்தார். பணி முடிந்து வீடு திரும்பும் போதெல்லாம் மாமா வீட்டிற்கு செல்வார். இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை,” என்றார்.
குடும்பத்தில் மூத்த மகன் என்பதால், நாரத் வீட்டின் எல்லா பொறுப்புகளையும் சுமந்ததாக அவரது தந்தை கூறினார்.
“குடும்பத்தில் பெரியவன் என்பதால் எல்லா வேலைகளையும் தானே செய்ய விரும்பினான். கடுமையாக உழைத்து லாரி ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்தான். அவனுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டிய நிலைமை வந்துவிட்டது. எங்களுக்கு நீதி வேண்டும்,” என்றார் அவர்.
உறவினர்கள் சாலை மறியல்
நாரத் இறந்ததையடுத்து சுபாஷ்புரா காவல் நிலையப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் பதற்றமான சூழல் நிலவியது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தலித் சமூகத்தினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ், “தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகளில் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஷிவ்புரி மாவட்டத்தின் இந்தர்கர் கிராமத்தில் தலித் இளைஞர் நாரத் ஜாடவ் கொடூரமாக அடித்து கொல்லப்படும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு செயலிழந்த நிலையில் உள்ளது,” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், நாரத் ஜாடவின் வீடு துக்கத்தில் மூழ்கியுள்ளது.
அவரது தாய் பேசும் நிலையில் இல்லை, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். வீட்டிற்கு வந்தவர்களை சமாளிப்பதில் தம்பி மும்முரமாக இருக்க, அப்பா ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு