• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ | Sellur Raju Explain about Action against Sengottaiyan

Byadmin

Nov 3, 2025


மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும்.

எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்வென்று தெரியும். அதனால், நேரில் போய்ப் பார்த்து ஆய்வு செய்ததால் தற்போது போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் விறுவிறுப்பாக நடப்பதாக சமாளிக்கிறார்கள். அதிமுகவின் இதுபோன்ற மக்கள் செயல்பாடுகளை முடக்குவதற்காக எங்களிலேயே மன வருத்தம் கொண்டவர்களைக் கொண்டு தூண்டிவிடுகிறார்கள். எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இருக்க மாட்டார்கள். யாருமே அப்படி இருப்பதில்லை.

எல்லோருக்கும் மன வேற்றுமை இருக்கும். ஏற்றத்தாழ்வு, ஈகோ பிரச்சினை, இதுவெல்லாம் இருக்கும். அவர்களை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியின் அவலங்களை மூடி மறைக்கலாம் என்று பார்க்கிறார்கள். இதே செங்கோட்டையனும் சேர்ந்து தான் பழனிசாமியை பொதுச் செயலாளராக்குவதற்கு எங்களுடன் சேர்ந்து பாடுபட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்றவர், ஓ.பன்னீர் செல்வம் நீக்கத்தை சரி என்ற கூறியவரும் அவர்தான்.

இப்போது நான் மாவட்டச் செயலாளர். எனக்கு கீழ் அவைத்தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர் போன்ற மற்ற நிர்வாகிகள் உள்ளனர். என்னுடைய ஆலோசனைப்படி அவர்கள் செயல்பட்டாதால் தான் மாவட்ட செயலாளராக நான் கட்சியை சிறப்பாக வழி நடத்த முடியும். அதுபோன்று பொதுச் செயலாளர் வழிகாட்டுதலுக்கு செங்கோட்டையன் செவிசாய்த்து இருக்க வேண்டும்.

ஆனால், பொதுச் செயலாளருக்கு எதிரானவர்களுடன் சென்று கைகோர்ப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும். பொதுச் செயலாளர் இந்தக் கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்கிறார். அவர் தலைமையில் போகும்போது, இந்த நேரத்தில் நமக்கு யார் எதிரி, நமக்கு திமுக எதிரி. எதிரி என்றால் இடத் தகராறாரா? ஒன்றுமில்லை. மக்கள் விரோத ஆட்சியை மேற்கொள்வது, வாரிசு அரசியல் செய்கிறார்கள். மக்கள் நலப் பணிகளை செய்யாமல் ஊழல் செய்கிறார்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

இந்த நேரத்தில் அவரை எனக்கு பிடிக்கவில்லை என்பதற்கெல்லாம் கட்சியை விட்டு நீக்க மாட்டார்கள். அதிமுகவில் இருந்து பேராசிரியர் ஜெயபால் சென்றார். இப்போது திரும்பி வந்தார். அவருக்கு பதவி கொடுத்து எங்கள் பொதுச் செயலாளர் அழகு பார்க்கிறார். இதுபோல் எத்தனையோ பேர் போனவர்கள், திரும்பி வந்தார்கள். அவர்களையெல்லாம் சேர்க்கத்தானே செய்கிறோம். யார் இருந்தால் கட்சிக்கு நல்லது என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கிறது.

தலைமை என்று உருவாக்கிவிட்டால் அந்த தலைமை சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தலைவரிடம் கேட்டால் எதுவும் வெளிப்படையாக சொல்லக்கூடாது. எனக்கே கூட பல வருத்தங்கள் இருக்கும். வருத்தம் என்பதற்காக ஊடகங்களை அழைத்து பொதுவெளியில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா?. பொதுச் செயலாளரை பார்த்து முறையாக முறையிட வேண்டும். அப்படியும் செய்ய முடியவில்லை என்றால் அமைதியாக இருந்துவிட்டு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது பொதுச் செயலாளரிடம் பேச வேண்டும்.

இதை தான் செய்ய வேண்டுமே ஒழிய, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த கட்சிக்கு விரோதமாக, பாதகமாக யார் செயல்பட்டாலும் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுப்பார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும், நிர்வாகியும் அதை வரவேற்க தான் செய்வார்கள்.

மாமன்ற உறுப்பினரையே, வார்டுகளில் வசிக்கும் மக்களால் தற்போது சமாளிக்க முடியவில்லை. அப்படியென்றால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்தவர்களை மக்கள் தேர்ந்தடுப்பார்களா?. மக்கள் கோரிக்கை மனு கொடுக்கச் சென்றால் திமுகக்காரங்க நாயை அவிழ்த்து விட்டுவிடுவார்கள். அவர்கள் எப்போதுமே ஜமீன்தார் போக்கிலேயே இருப்பார்கள். தேர்தலுக்கு முன் இனிக்க இனிக்கப் பேசுவார்கள். தேர்தல் முடிந்த பிறகு மக்களை மறந்துவிடுவார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முறையாவது மறு முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்துள்ளதா?. தனித்து நின்று ஆட்சியைப் பிடித்த வரலாறு திமுகவுக்கு இருக்கிறதா?. நாங்களெல்லாம் தனித்து நின்று எங்க சாதனையை சொல்லி வந்து இருக்கோம். திமுகவினருக்கு தெரியும், தங்களுக்கு செல்வாக்கு இல்லை என்பது. அதனால்தான், அவர்கள் இப்போது கூட்டணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கூட்டணி பலம் என்ற மாயையை உருவாக்கி மக்களை நம்ப வைத்து, கொள்ளைடித்து வைத்து இருக்கிற நோட்டுகளை கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு மக்களை ஒரு கைபார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.” என்றார்.

“அப்படியென்றால் உங்களுக்கு கட்சியில் மன வருத்தம் இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிர்ச்சியடைந்த செல்லூர் கே.ராஜூ, “யாரு சொன்னா, ஏங்க ஒரு உதாரணத்துக்கு நான் சொன்னால், எனக்கு மன வருத்தம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள், தேவையில்லாமல் இதையே தலைப்பா போட்டு இழுத்துவிடப் பார்க்கிறீர்கள். அந்த மனவருத்தம் செல்லூர் ராஜூவுக்கு இல்லை. என்னை எங்க பொதுச் செயலாளர் நன்றாக வைத்துள்ளார்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு மன வருத்தம் இருக்கிறது என்றால், பொதுவெளியில் சொல்லக்கூடாது. பொதுச் செயலாளருக்கு எதிராக உள்ளவர்களிடம் போய் நின்றால் சும்மா விடுவார்களா?. அதற்காக சொன்னால் எனக்கு மன வருத்தம் என்கிறீர்களே.” என்று செல்லூர் ராஜூ கூறினார்.



By admin