பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காட்டுயிர்கள் தாக்கி 685 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் யானைகள் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 522.
இந்தத் தகவல்களைத் தொகுத்துள்ள தமிழக வனத்துறை, கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஜூலை வரையிலும் இயற்கையாக 1,586 யானைகளும், இயற்கைக்கு மாறான பிற காரணங்களால் 179 யானைகளும் இறந்திருப்பதையும் கண்டறிந்துள்ளது. இதே கால கட்டத்தில் மனித செயல்பாடுகளால் 27 புலிகளும், 37 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளன.
வனத்துறை நடவடிக்கைகளால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் விளக்கினார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு.
ஆனால், காடுகளின் பரப்பை அதிகப்படுத்தவும், துண்டாடப்பட்ட காடுகளை இணைக்கவும், முக்கியமாக யானை வழித்தடங்களை முழுமையாக மீட்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.
எந்தெந்த காட்டுயிர் தாக்கி எவ்வளவு பேர் இறந்தார்கள்?
தமிழகம் முழுவதும் நடந்து வரும் மனித-காட்டுயிர் மோதல்கள் தொடர்பான பல்வேறு தரவுகளையும் சேகரித்து ஒருங்கிணைந்த ஒரு தகவல் தொகுப்பை வனத்துறை உருவாக்கியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும், கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், இந்தத் தகவல்களைத் தொகுத்து, சமீபத்தில் நடந்த வனத்துறை கருத்தரங்கில் வெளியிட்டார். அதில், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஜூலை இறுதி வரையிலுமாக, காட்டுயிர்கள் தாக்கி இறந்தவர்கள், இயற்கையாகவும், அதற்கு மாறாகவும் இறந்த காட்டுயிர்கள் குறித்தும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பத்தாண்டுகளில் (2015–2025) தமிழகம் முழுவதும் காட்டுயிர்கள் தாக்கி 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
* காட்டு யானைகள் தாக்கி இறந்தவர்கள் – 522 பேர்
* காட்டு மாடுகள் (Indian Gaur) தாக்கி இறந்தவர்கள் –94 பேர்
* காட்டுப்பன்றிகள் தாக்கி இறந்தவர்கள் – 22 பேர்
* மான்களால் இறந்தவர்கள் –12 பேர்
* கரடிகள் தாக்கி இறந்தவர்கள் – 9 பேர்
* புலிகள் தாக்கி இறந்தவர்கள் – 8 பேர்
* சிறுத்தைகள் தாக்கி இறந்தவர்கள்– 8 பேர்
* முதலைகள் தாக்கி இறந்தவர்கள் – 8 பேர்
* இதர காட்டுயிர்கள் தாக்கி இறந்தவர்கள் – 2 பேர்
கடந்த 2023 ஆம் ஆண்டில் 84 பேர், காட்டுயிர்கள் தாக்கி இறந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 79 ஆகவும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 43 ஆகவும் குறைந்திருப்பதாக வனத்துறை தெரிவிக்கிறது. இதற்கு வனத்துறை எடுத்து வரும் வனப்பாதுகாப்பு மற்றும் மனித–காட்டுயிர் மோதல் தடுப்புக்கான பல்வேறு நடவடிக்கைகள்தான் காரணமென்று விளக்குகிறது தமிழக வனத்துறை.
இந்தியாவில் காடுகளின் பரப்பில் தமிழகம் 9வது மாநிலமாக உள்ளதாகச் சொல்கிறது வனத்துறை புள்ளிவிவரம்.
சமீபத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையில், தமிழகத்தில் 306 புலிகள், 3170 யானைகள், 868 சிறுத்தைகள், 1031 நீலகிரி வரையாடுகள் மற்றும் 157 வல்லூறுகள் இருப்பதாக வனத்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த புள்ளிவிவரங்களைப் போலவே, இயற்கையாகவும், இயற்கைக்கு மாறாக மனித செயல்பாடுகளால் எத்தனை காட்டுயிர்கள் உயிரிழந்துள்ளன என்ற விவரத்தையும் தமிழக வனத்துறை தொகுத்துள்ளது.
பட மூலாதாரம், Deepak Rajbanshi
‘மின்சாரத்தால் கொல்லப்படும் யானைகள்; நஞ்சால் உயிரிழக்கும் புலிகள்’
அதன்படி, 2010 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக வனப்பகுதியில் 1,586 யானைகள் இயற்கையாகவும், 179 யானைகள் இயற்கைக்கு மாறாகவும் இறந்துள்ளன. இதேபோன்று, இயற்கையாக 74 புலிகளும், 256 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளன. மனித செயல்பாடுகளால் 27 புலிகளும், 37 சிறுத்தைகள் பலியாகியுள்ளன.
யானைகளின் இயற்கைக்கு மாறான மரணங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகள் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது. கடந்த 2011, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் முறையே, 3, 3 மற்றும் 2 என்றிருந்த இந்த எண்ணிக்கை, 2015, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே 11, 11 மற்றும் 13 என அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 13 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 12 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை வரையிலும் 2 யானைகள் மட்டுமே இந்த முறையில் இறந்ததாகக் கூறுகிறது வனத்துறை.
இயற்கைக்கு மாறான புலிகள் மரணங்களுக்கு, நஞ்சு கலந்த உணவே முக்கியக் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள்
பட மூலாதாரம், Supriya Sahu
மனித–காட்டுயிர் மோதல்களுக்கான முக்கியமான சில காரணங்களை பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ.
அவர் பட்டியலிட்ட சில விஷயங்கள்:
- முதன்மையான காரணம் காட்டுயிர்களின் வாழ்விடம் சிறியதானதும், அவற்றின் வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டதுமாகும். நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுடன் காட்டுயிர்களின் தீவனம், நீர் வளம் குறைந்தது, நிலத்தடி நீர் சுரண்டல், அடிப்படைக் கட்டமைப்பு விரிவாக்கம், காடுகளுக்கு அருகே மனித குடியேற்றம் ஆகியவைதான்.
- கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் வேகமான வேளாண்மை விரிவாக்கம், நகரமயமாக்கல், சாலை, ரயில் பாதை, மின் இணைப்புகள் போன்ற கட்டமைப்புகள் அதிகரித்துள்ளன.
- குறிப்பாக கோவை, ஓசூர், நீலகிரி கூடலுார் பகுதிகளில் கிராமங்களுக்குள் காட்டு விலங்குகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
- இதற்கு நேரெதிராக வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, புலி போன்றவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், புலிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இவை மனிதர் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையும் சூழல் உருவாகி, மோதல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
- யானைகள் மிகப்பெரிய தாவர உண்ணிகள் (mega herbivores) என்பதால் அவை தங்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பருவ காலத்துக்கு ஏற்ப பல்வேறு வாழ்விடங்களுக்கு இடம் பெயர வேண்டும். காடுகளுக்கிடையில் மனித குடியிருப்புகள் இருப்பதால், மக்கள்–யானை நேரடி மோதல்கள் அதிகம் ஏற்படுகிறது.
- சமீபகாலமாக நடக்கும் மனித–யானை மோதல்களில் பெரும்பாலானவை, அவற்றின் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் ஆனவை. கடந்த 2021–2025 இடையிலான 5 ஆண்டுகளில் காட்டுயிர்களால் 246 பேர் உயிரிழந்திருப்பதில், யானைகளால் மட்டுமே 70 சதவீதம் பேர் இறந்துள்ளனர்.
- நிலப் பயன்பாடு மாற்றங்களுடன், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகளிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும் வாழை, தென்னை, மா மற்றும் கரும்பு போன்றவை பயிரிடுவதும் ஒரு முக்கியக் காரணம்
பட மூலாதாரம், Venkatesh
பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், ”காட்டை விட்டு உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் வெளியே வரும்போதுதான், யானை–மனித மோதல் அதிகமாகிறது. இதனால் மனிதர்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. மறுபுறத்தில் மனித செயல்பாடுகளால் யானைகள் இறக்கின்றன. காயமடைகின்றன. தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.” என்றார்.
தமிழக வனத்துறை கடந்த 10–15 ஆண்டுகளில் தமிழக வனப்பகுதிகளில் காட்டுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையும் புள்ளிவிவரம் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளது. உதாரணமாக 1998–1999 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 53 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் 61 (2000–2001), 76 (2005–2006), 163 (2010–2011), 229 (2014–2015), 264( 2018–2019) என்று உயர்ந்து 2023–2024 கணக்கெடுப்பில் 306 புலிகள் என்கிற அளவில் உள்ளது.
இதேபோன்று, யானைகள் எண்ணிக்கையும் முதலில் குறைந்து தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த 2017–2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை, 2761 ஆகக் குறைந்து, கடந்த 2024–2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 3170 ஆக உயர்ந்துள்ளது. அறிக்கையிலுள்ள யானை கணக்கெடுப்பு விவரம்:
- 2002–2003 ஆம் ஆண்டு– 3,052 யானைகள்
- 2007–2008 ஆம் ஆண்டு– 4,015 யானைகள்
- 2012–2013 ஆம் ஆண்டு– 3,987 யானைகள்
- 2017–2018 ஆம் ஆண்டு– 2,761 யானைகள்
- 2022–2023 ஆம் ஆண்டு– 2,981 யானைகள்
- 2023–2024 ஆம் ஆண்டு– 3,063 யானைகள்
‘வாழ்விடங்களை மேம்படுத்துவதும் வழித்தடங்களை மீட்பதுமே தீர்வு’
காடுகளின் பரப்பையும், தரத்தையும் அதிகப்படுத்தாமல் காட்டுயிர்கள் பாதுகாப்பை மட்டும் பலப்படுத்தி வருவதால் காட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகி, வாழ்விட பற்றாக்குறையால் அவை வெளியே வருவதாகச் சொல்கிறார் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரியான பத்திரசாமி. இவர் யானை–மனித மோதல் சார்ந்த விஷயங்களை திறம்பட கையாண்ட அனுபவமுள்ளவர்.
பிபிசி தமிழிடம் பேசிய பத்திரசாமி, ”நான்கு பேர் இருக்கும் வீட்டில் 8 பேர் வசிப்பது கஷ்டம். அதுவே 12 பேரானால் 4 பேர் வெளியேதான் படுக்க வேண்டும். அதுபோலத்தான் காட்டுயிர்களின் வாழ்விடப் பரப்பு பற்றாக்குறையாக மாறியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் காடுகளின் தரம் மிகவும் குறைந்துவிட்டது. காட்டுயிர்களின் வாழ்விடங்களாக இருந்த காடுகள், அதையொட்டிய பகுதிகளில் பலவிதமான இடையூறுகள் வந்துவிட்டன. அதனால் காடுகளின் பரப்பை அதிகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என்றார்.
காடுகளுக்கு மத்தியிலும், காடுகளை ஒட்டியும் உள்ள தேயிலைத் தோட்டங்களை காடுகளாக மாற்ற வேண்டியது அவசியம் என்கிறார் பத்திரசாமி.
பட மூலாதாரம், Osai Kalidasan
பிபிசி தமிழிடம் பேசிய ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், ”கடந்த 100–150 ஆண்டுகளில் காடுகளை வெகுவாக சேதப்படுத்திவிட்டோம். நமது காட்டில் எவ்வித சேதத்துக்கும் உள்ளாகாத காடு (virgin forest) என்றால் அது 6 சதவீதம்தான். மேய்ச்சல் நிலங்களான புல்வெளிகளை அழித்தே தேயிலை, காஃபி, ரப்பர் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் வனத்துறையே மரங்களை வெட்டி விற்றுள்ளது. அழிக்கப்பட்ட காட்டை மீட்டுருவாக்கம் செய்யவில்லை.” என்கிறார் காளிதாசன்.
காட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு, வனப்பாதுகாப்புச்சட்டம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முக்கியக் காரணம் என்று கூறும் காளிதாசன், அதனால் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்கிறார்.
”வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம்-1972 வருவதற்கு முன்பாக வேட்டை அதிகமாக நடந்தது. ஆண் யானைகள் குறி வைத்து கொல்லப்பட்டன. இதனால் காட்டு யானைகளில் ஆண் – பெண் விகிதம் கவலை தரக் கூடிய அளவுக்கு மோசமாக இருந்தது. தற்போது வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் ஆண் யானை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.” என்றார் காளிதாசன்.
வனத்துறை விளக்கம்
காட்டுக்குள் தீவனப்பயிர்கள் பயிரிடுவது, புல்வெளிகளை மீட்பது, தடுப்பணை, தொட்டிகள் என நீர் நிலைகளை ஏற்படுத்தி காட்டுயிர் வாழ்விடங்களை மேம்படுத்துவது உட்பட மனித–காட்டுயிர் மோதலைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் வனத்துறை பட்டியலிட்டுள்ளது.
இதுதொடர்பாக வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் சில கேள்விகளை பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு விரிவாக பதிலளித்த அவர், ”நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் கடந்த 2022-ல் யானை இறப்பு தணிக்கை கட்டமைப்பு (Elephant Death Audit Framework) கொண்டு வரப்பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது படிப்படியாகக் குறைந்து 2025-ல் 3ஆக அதாவது 79 சதவிகிதம் குறைந்துள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், TNFD
‘ 8, 589 யானைகளை பாதுகாக்க ஏஐ நுட்பம்’
தமிழக காடுகளில் இருந்து 19,886 ஹெக்டேர் (50 ஆயிரம் ஏக்கர்) பரப்பில் அந்நியச் செடிகள் அகற்றப்பட்டது, அகஸ்திய மலையில் 1,19,748 ஹெக்டேர் பரப்பை (3 லட்சம் ஏக்கர்) யானைகள் காப்பகப் பகுதியாக அறிவித்தது ஆகியவற்றை தமிழக வனத்துறையின் முக்கிய நடவடிக்கையாக அவர் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாடு மின்சார வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை)-2023 சட்டம் மூலம் சட்டவிரோத மின்வேலிகள் குறைப்பு, யானை வழித்தடம் அடையாளங்காட்ட குழு அமைப்பு, மனித–காட்டுயிர் மோதல் தடுப்புக்கான ஆலோசனைக்குழு, காய் வெடிகளால் ஏற்படும் காட்டுயிர் மரணங்களைத் தடுக்க மாவட்டக்குழுக்கள், அகழி, சூரிய மின்வேலி, இரும்பு தடுப்புகள் அமைப்பு, தொங்கு சூரிய வேலிகள், 60 சிறப்பு கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டது என பலவிதமான அரசு நடவடிக்கைகளையும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு விவரித்தார்.
அதிகளவு ரயில் விபத்து யானை மரணங்களை எதிர் கொண்ட கோவை–வாளையாறு இடையிலான தமிழகத்தின் மதுக்கரை வனப்பகுதியில் கடந்த 2023லிருந்து 2026 வரை, ஏ.ஐ. தொழில்நுட்பத்தால், ரயில் விபத்து யானை மரணத்தை பூஜ்யமாகக் குறைத்திருப்பதாக அவர் கூறினார். நீலகிரி கூடலுாரியில் 90 ஏஐ சென்சார்கள் வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த 3 ஆண்டுகளில் 6,595 எச்சரிக்கைகளில் 8,589 யானைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவை அனைத்தையும் விட யானைகளின் வாழ்விடங்களை விரிவாக்குவதும், துண்டாடப்பட்டுள்ள வழித்தடங்களை இணைப்பதுமே முக்கியப் பணி என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். காட்டுக்குள்ளும், காட்டை ஒட்டியும் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் கையகப்படுத்தி அவற்றை வனப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென்கிறார் ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரி பத்திரசாமி.
இதே கருத்தை வலியுறுத்தும் காளிதாசன், ”யானைகள் தினமும் 250 கிலோ உணவுக்காக காடெங்கும் 16 மணி நேரம் மேய்ச்சலில் இருக்கும். அந்த உணவும் நீரும் காட்டில் கிடைக்காத போது வெளியில் வரும். தேடும் உணவு ஒரே விளைநிலத்தில் கிடைத்தால் அதுவே அதற்குப் பழக்கமாகிவிடும். அதனால் யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்த வேண்டும். முதலில் களைச்செடிகளை முற்றிலும் அகற்றி, மேய்ச்சல் நிலங்களையும், தாவர வகைகளையும் அதிகப்படுத்த வேண்டும்.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு