பட மூலாதாரம், Getty Images
மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம்.
பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம்.
நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன.
ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா?
எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு
எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க்.
“புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்,” என்று அவர் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images
பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது.
எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும்.
பூமியின் வேதியியலை மாற்றுதல்
பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும்.
பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது “இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்” என்கிறார்.
“மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்,” என்கிறார் ஃபிராங்க்.
பரிணாமத்தை மறுவடிவமைத்தல்
நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம்.
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass – அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது.
அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம்.
“நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்,” என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச்.
“நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், ‘என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?’ என்று ஆச்சரியப்படுவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்.”
நமது ‘இறுதி மரபுச் சின்னம்’
பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய “Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy” என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர்.
ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள்.
பட மூலாதாரம், Sarah Gabbott
இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம்.
பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம்.
”கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்… அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்.” என்கிறார் ஜான் ஸலாசியேவிச்.
நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்.
பிளாஸ்டிக் “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்” என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.
2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம்.
ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல.
“நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது,” என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.
“எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்.”
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார்.
“காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே… சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்,” என்று அவர் ஊகிக்கிறார்.
கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள்
மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ”ஆம்” என்கிறார்.
“பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் – பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறுகிறார்.
பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு