பட மூலாதாரம், Science Photo Library
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒரு குழந்தையின் புதைபடிமம் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை, மனித பரிணாமம் குறித்த நமது புரிதலை முற்றிலுமாக மாற்றத் தொடங்கியது.
ஆனால், அந்த மாற்றம் அவ்வளவு எளிதில் நடக்கவில்லை.
அந்தக் கட்டுரையின் ஆசிரியர் ரேமண்ட் டார்ட், தனது வீட்டில் நடந்த நண்பரின் திருமணத்தன்று அதைப் புதைபடிமத்தைக் கண்டுபிடித்தார். அது, சந்தேகத்திற்கு இடமின்றி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமங்களுள் முக்கியமான ஒன்றாக மாறியது.
மணமகன் அங்கு வந்து சேரவிருந்த நேரம் அது. அவர்தான் மாப்பிள்ளைத் தோழராக இருந்தார். அப்போது, இரண்டு பெரிய பெட்டிகளுடன் ஒரு தபால்காரர் அங்கு வந்தார். அது நிச்சயமாக பரிசுகள் அல்ல என்று அவற்றைப் பார்த்தபோதே ரேமண்டுக்கு புரிந்தது. அவர் ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் தி மிஸ்ஸிங் லிங்க்’ என்ற 1959ஆம் ஆண்டு வெளியான தனது நினைவுக் குறிப்பில் இதுகுறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
ரேமண்டின், உடற்கூறியல் மாணவர்களுள் ஒருவரான ஜோசஃபின் சால்மன்ஸ் எதிர்பாராத ஒரு புதைபடிமம் குறித்து முன்பே தகவல் தெரிவித்து இருந்ததால் அதற்காக ரேமண்ட் காத்திருந்தார்.
‘டௌங்’ (Taung) எனப்படும் ஓரிடத்தில் சுண்ணாம்பு சுரங்கத் தொழிலாளர்கள் சில புதைபடிமங்களைக் கண்டுபிடித்திருந்தனர். டௌங் என்பதற்கு ‘சிங்கத்தின் இருப்பிடம்’ என்று பொருள். அந்த இடம், தென் ஆப்பிரிக்காவில் ரேமண்ட் டார்ட் கற்பிக்கும் ஜோஹன்னெஸ்பெர்க்கின் வடமேற்கில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ளது.
புதிதாக நிறுவப்பட்ட விட்ஸ் என அறியப்படும் விட்வாட்டஸ்ரண்ட் பல்கலைக் கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராக ஓராண்டாகப் பணிபுரிந்து வந்தார் ரேமண்ட். புதிதாக நிறுவப்பட்டதால், அங்கு உபகரணங்கள், நூலகம் மட்டுமின்றி, ஆய்வுக்கான மாதிரிகளுக்கான பற்றாக்குறையையும் ரேமண்ட் எதிர்கொண்டார்.
அதனால் அந்த மாதிரிகளை வீட்டுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார் ரேமண்ட். அவை வந்ததைப் பார்த்த பிறகு, திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த அவர், அரை நிர்வாணமாகவே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றார்.
திருமணம் முடிந்த பிறகு அவற்றை ஆராயுமாறு ரேமண்டின் மனைவி டோரா கெஞ்சியபோதும், அவரால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டாவது பெட்டியில், வண்டல்கள் சூழ்ந்த கல் ஒன்றின் உள்ளே மண்டை ஓடு ஒன்று அரிதாக வெளியே தெரிந்தது.
மனைவி டோராவின் கெஞ்சல்களைப் புறந்தள்ளிவிட்டு, ஒரு துணி தைக்கும் ஊசியின் மூலம் அதிலிருந்த சுண்ணாம்பு மற்றும் மணலை அகற்றினார். தான் வேறு மாப்பிள்ளைத் தோழரை வைத்துக் கொள்வதாக அவரது நண்பர் கடிந்துகொண்ட பிறகே, ரேமண்ட் அந்த ஆய்வைத் தற்காலிகமாகக் கைவிட்டு, திருமணத்தில் கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு, அவர் மீண்டும் அந்த ஆய்வைத் தொடங்கியபோது அதை முடிக்கும் வரையில் அதைக் கைவிடவில்லை.
பட மூலாதாரம், Science Photo Library
“அந்தக் கல் இரண்டாகப் பிளந்தது,” என்று தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.
“அதிலிருந்து வெளியே தெரிந்தது ஒரு குழந்தையின் முகம், பால் பற்கள் நிரம்பியிருந்தது.”
“அந்த ‘டௌங் பேபியை’ (குழந்தையின் புதைபடிமம்) 1924 கிறிஸ்துமஸில் கண்டுபிடித்தபோது நான் அடைந்த பெருமையை வேறு எந்தத் தந்தையாவது அடைந்திருப்பாரா என்பது சந்தேகமே” என்று அந்த அனுபவத்தை ரேமண்ட் விவரிக்கிறார்.
இரண்டு கால்கள்
அதன் முகம் மட்டுமே டார்ட் கண்டுபிடித்த ஆச்சர்யகரமான விஷயம் அல்ல.
“அந்த மண்டை ஓட்டின் உட்பகுதியிலும்கூட ஆச்சர்யங்கள் இருந்தன.”
நரம்பியல் உடற்கூறியல் நிபுணராகவும் மூளை உருவவியல் நிபுணராகவும் இருந்த அவர், “பார்த்த உடனே தனது கைகளில் உள்ளது சாதாரண மனித மூளை அல்ல” என்பதை உணர்ந்தார்.
“அது பெருங்குரங்கு (பபூன்) ஒன்றின் மூளையைவிட மூன்று மடங்கு பெரிதாக இருந்தது. அவ்வளவு ஏன், வயது வந்த மனிதக் குரங்கு ஒன்றின் மூளையைவிடப் பெரிது,” என்று பின்னாளில் டார்ட் குறிப்பிட்டார்.
“மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் முதுகெலும்பு உள்நுழையும் பகுதியையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்பகுதிக்கு ஃபோரமென் மேக்னம் எனப் பெயர்,” என்று விட்ஸ் பல்கலைக் கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ள பழங்கால ஆராய்ச்சியாளர் லீ பெர்கெர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“உடனடியாக, வியக்கத்தக்க வகையில், அந்தப் படிமம் இரண்டு கால்களில் நடக்கும் குரங்கினத்தின் மூளை எனும் கருத்துக்கு வந்தார்.
“இதற்கு முன்பு இப்படியொரு புதைபடிமம் கண்டுபிடிக்கப்படவில்லை,” என அவர் குறிப்பிடுகிறார்.
“வரலாற்று ரீதியாகக் கூற வேண்டுமானால் மானுட இனம் குறித்த சிக்கலைத் தீர்க்க அறுபட்ட தொடர்பு ஒன்று கிடைத்ததைப் போன்றது,” என்று பழங்கால மானுடவியலாளர் சார்ல்ஸ் லாக்வுட் 2008இல் இதுகுறித்து பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Science Photo Library
“மனிதப் பண்புகளுடன் குரங்கு போன்ற ஓர் உயிரினம் இருந்ததற்கான முதல் ஆதாரம் அது.”
“மனிதனுடன் போட்டியிடத் துணிந்த ஓர் உயிரினம்” என்று அவர் அதை ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டார்.
அதன் அம்சங்கள் “வியக்கத்தக்க வகையில் ஒன்றாக இருந்ததாகவும்” அவர் குறிப்பிடுகிறார்.
மனித இனத்தின் தொட்டில் எது?
“இந்தப் புதைபடிமம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்துதான் மனித இனம் பரிணமித்தது என்பது குறித்த எண்ணம் இல்லை” என பெர்கெர் வலியுறுத்துகிறார்.
“மேலும், இது சுமார் 25-30 ஆண்டுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் கண்டம்தான் மனித இனத்தின் தொட்டில் என்று சார்லஸ் டார்வின் கணித்திருந்தார். இருப்பினும் அந்தக் கூற்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஆனால், ‘ஜாவா மேன்’ (ஹோமோ எரெக்டஸ்) மற்றும் ‘பெக்கிங் மேன்’ (ஹோமோ எரெக்ட்ஸ் பெகினென்சிஸ்) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பரிணாமவியலின் தந்தையான டார்வினின் கோட்பாடு மறுக்கப்பட்டு, மனித இனத்தின் தொட்டில் ஆசியாதான் என்று பரிந்துரைக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1912ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட (இயோந்த்ரோபஸ் டாவ்சோனி – Eoanthropus dawsonii) ‘பில்ட்டவுன் மேன்’ என்று பிரிட்டனில் மனிதனை ஒத்த மூளை அளவு மற்றும் குரங்கை ஒத்த தாடையுடன் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனித இனத்தின் தோற்றம் ஐரோப்பாவாக இருக்கலாம் என்றும் நம்பப்பட்டது.
எனினும், தான் கண்டுபிடித்த குழந்தையின் மண்டை ஓட்டுக்கும் மற்ற மனித இனங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதை டார்ட் கவனித்தார்.
பல்வேறு மனித இனங்களுக்கும் டார்ட் கண்டுபிடித்த புதைபடிமத்துக்கும் இடையே ஒற்றுமைகள் இருந்தாலும், மற்றவை ஏற்கெனவே மனிதர்களாகப் பரிணமித்தவை.
டார்ட் கண்டுபிடித்த புதைபடிமம், குரங்கினுடையது அல்ல, அதேநேரம் முற்றிலுமாக மனிதனாகவும் பரிணமிக்கவில்லை.
எனவே, நமக்கும் நம்முடைய குரங்கின மூதாதையர்களுக்கும் ஒரு பிணைப்பு அறுபட்டதாக அவர் கருதினார், அப்போது, எந்தவொரு ஆங்லோ – சாக்சோனிய விஞ்ஞானி என்ன செய்வாரோ அதை அவர் செய்தார். நேச்சர் என்ற பிரிட்டிஷ் ஆய்விதழின் ஆசிரியருக்கு எழுதினார்.
அவருடைய கண்டுபிடிப்பு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்ததால், அதைப் பிரசுரிக்க சில காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
“ஆஸ்ட்ரலோபிதெகஸ் ஆப்ரிகானுஸ், தி ஏப் மேன் ஆஃப் சௌத் ஆப்பிரிக்கா’ என்ற தனது கட்டுரையில் அவர் செல்வாக்கு மிக்க பழங்கால மானுடவியலாளர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அவை எல்லாம் எதிர்மறையாகவே இருந்தன.
தாக்குதல்களும் பகடிகளும்
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டார்ட், சிட்னி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பிரபல மானுடவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டுப் பிறகு, கல்வித் துறையில் அதிகம் அறியப்படாத தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார்.
அவர் தனது 32 வயதில் அதிகம் அறியப்படாத, புதிதாகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் உடற்கூறியல் துறையின் தலைவராக ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றியவர். ஆனால் அவரே, “ஓர் அதிர்ஷ்டத்தால்” தான் இதைக் கண்டுபிடித்ததாக எழுதியுள்ளார்.
அடுத்த சில வாரங்களிலேயே தவிர்க்க முடியாத மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்றைத் தாம் கண்டுபிடித்ததாக அவர் கருதினார்.
அந்த புதைபடிமம் குறித்து மதிக்கத்தக்க கல்வி நிறுவனங்கள் அல்லது விஞ்ஞானிகளிடம் தெரிவித்து, முதலில் அவர்களின் ஆதரவை நாடாமல் அதை எவ்வித பதற்றமும் இன்றி உலகுக்கு அறிவித்தார்.
இவை அனைத்தும் சேர்ந்து அவருடைய கட்டுரை கடுமையாக நிராகரிக்கப்பட்டது.
“இன்றைய மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒரு அழிந்துபோன குரங்கு இனத்தின் மண்டை ஓடு.” என டார்ட்டால் விவரிக்கப்பட்டதை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகளால் “நிச்சயமாக ஒரு குரங்கு” அல்லது “ஒரு மனிதக் குரங்கின் சிதைந்த மண்டை ஓடு” என்று மட்டுமே கருதப்பட்டது.
மனித மூதாதையர்கள் தென் ஆப்பிரிக்காவின் சமவெளிகளிலேயே பரிணமித்திருப்பர் என்றும் பல உணவுகள் உள்ள காடுகளில் அல்ல என்றும் அவர் யோசனையை முன்வைத்தார். “அந்த இனத்திடம் இருந்த மேம்பட்ட மூளை திறன்கள் இந்தக் கடுமையான சூழலில் அவர்களின் இருத்தலை சாத்தியமாக்கியது” என அவர் கூறினாலும் இந்த யோசனையை முன்வைத்தார்.
குவாரியில் கண்டெடுக்கப்பட்ட கற்களை ஆஸ்ட்ராலோபிதேகஸ் (அழிந்துபோன மனித இனம்) கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளனர் என்ற அவரது அனுமானத்தை அவருடைய சகாக்கள் கேலி செய்தனர், மேலும் அவற்றுக்கு “டார்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்” என்று கேலியாக பட்டப்பெயர் சூட்டினர்.
கல்வித்துறையைத் தாண்டி டார்ட்டும் அவர் கண்டுபிடித்த புதைபடிமமும் நகைச்சுவையாகவும், நிகழ்ச்சிகளாகவும் பாடல்களாகவும் கேலி செய்யப்பட்டன.
இதற்கிடையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரை “துரோகி” என்றும் “சாத்தானின் ஏஜெண்ட்” என்றும் குற்றம் சாட்டி, “நரகத்தின் நெருப்பில் அவர் வாட வேண்டும்” என்றும் கூறி கடிதங்கள் எழுதினர்.
எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
பட மூலாதாரம், Science Photo Library
மனித பரிணாமம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயின.
ஆப்பிரிக்காவில் அதிகமான ஆஸ்ட்ராலோபிதேகஸ் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் கருத்து மாற்றம் தவிர்க்க முடியாததாக மாறியது.
கடந்த 1946ஆம் ஆண்டு உடற்கூறியல் நிபுணர் வில்ஃப்ரிட் லு க்ரோஸ் கிளார்க் அந்தப் புதைபடிமத்தைப் பரிசோதித்து, அதுவொரு மனித இனம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
கடந்த 1974இல் ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு மனித இனத்தின் பிரபலமான எலும்புக்கூடு புதைபடிமமான “லூசி” கண்டுபிடிக்கப்பட்டதும், 1976 மற்றும் 1978க்கு இடையில் தான்சானியாவில் 35 லட்சம் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஆப்பிரிக்காவுக்கு வெளியே டார்ட்டின் கோட்பாடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியில் டுவாங் குழந்தையின் படிமம், நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக மாறியது. அடுத்தடுத்த ஆய்வுகள் டார்ட்டின் பெரும்பாலான முடிவுகள் சரியானவை என்பதை உறுதிப்படுத்தின, இருப்பினும் ஆஸ்ட்ராலோபிதேகஸை பற்றிய அறிவு குவிந்து தொழில்நுட்பம் மேம்பட்டதால் சில அம்சங்கள் சரிசெய்யப்பட்டன.
டார்ட் கணக்கிட்டது போல் அந்தக் குழந்தை 6 அல்லது 7 வயதில் இறக்கவில்லை என்றும் 3 அல்லது 4 வயதில் இறந்த குழந்தை என்பதும் தெரிந்தது. மேலும், அது கழுகு தாக்கி இறந்ததும் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட தனது கருத்துகள் எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை ரேமண்ட் டார்ட்டால் காண முடிந்தது.
கடந்த 1984ஆம் ஆண்டில், அமெரிக்க இதழான சயின்ஸ், 20ஆம் நூற்றாண்டில் மனித வாழ்க்கையை வடிவமைத்த 20 அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டார்ட் 95 வயதில் உயிரிழந்தார்.
அந்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்ட தளம், 2005 முதல் யுனெஸ்கோவின் ‘கிரேடில் ஆஃப் ஹியூமன்கைண்ட்’ எனும் உலக பாரம்பரிய தலங்களுள் ஒரு பகுதியாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு