• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

மனித உரிமை மீறல் ஈடுபட்டதாக உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு | Chennai High Court Orders Cancellation of Fine Imposed on Inspector

Byadmin

Aug 23, 2025


சென்னை: மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, உதவி ஆய்வாளருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த அமுதா என்பவர், கடந்த 2020-ஆம் ஆண்டு விடுமுறைக்காக திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது சொத்து பிரச்சினை தொடர்பாக, அவருக்கும், மாமியார் சுப்புலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தன்னை மருமகள் அமுதா தாக்கிவிட்டதாக மாமியார் சுப்புலட்சுமி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அமுதாவை விசாரணைக்கு அழைத்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்போது, பத்தமடை காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தன்னை தாக்கியதாகக் கூறி அமுதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், அமுதாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை உதவி ஆய்வாளர் ராஜரத்தினத்திடம் வசூலிக்கவும் 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அத்துடன், ராஜரத்தினத்துக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜரத்தினம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.அலெக்சிஸ் சுதாகர், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி, முறையான விசாரணை நடத்தாமல் மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அமுதா காயமடைந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனித உரிமை ஆணையம் சட்டப்படி விசாரணை நடத்தாமல், புகார் மற்றும் பதில் மனுக்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகார்தாரரான அமுதா காயமடைந்தது தொடர்பான மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறி, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.



By admin