• Fri. Mar 28th, 2025

24×7 Live News

Apdin News

மனோஜ் காலமானார்: இயக்குநராக விரும்பியவரை நடிகராக்கிய பாரதிராஜா – மனோஜின் நிறைவேறாத ஆசை என்ன?

Byadmin

Mar 26, 2025


மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

பட மூலாதாரம், FACEBOOK/MANOJ BHARATHIRAJA

தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1976ஆம் ஆண்டு பாரதிராஜா – சந்திரலீலா தம்பதிக்குப் பிறந்தவர் மனோஜ். தந்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்ததால் சிறு வயது முதலே திரைப்படத் துறையின் பரிச்சயத்துடன் வளர்ந்த மனோஜ், அத்துறையின் மீது ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். பள்ளி முடிக்கும் முன்னரே தனது தந்தையிடம் உதவி இயக்குநராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார் மனோஜ்.

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

பட மூலாதாரம், FACEBOOK/MANOJ BHARATHIRAJA

படக்குறிப்பு, என்றுமே தனது காட்ஃபாதர் என்று மணிரத்னத்தையே குறிப்பிட்டுள்ளார் மனோஜ்

ஆனால் பாரதிராஜா, வேறு ஒரு இயக்குநரிடம் பணியாற்றுமாறும் அறிவுறுத்த, அடுத்த சில நாட்களில், மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கினார் மனோஜ். என்றுமே தனது காட்ஃபாதர் என்று மணிரத்னத்தையே குறிப்பிட்டுள்ளார் மனோஜ்.

இதன் பின் பாரதிராஜாவின் தமிழ்ச் செல்வன் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ், திரைப்படம் இயக்கும் தன் ஆர்வத்தை அப்பாவிடம் கூறினார். ஆனால் நடிகனாகத் தன்னால் சாதிக்க முடியாததை, மகன் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய பாரதிராஜா, மனோஜை நடிகனாகச் சொன்னார். இதன் பிறகே மனோஜ் நடிகனாகத் தன் பாதையை மாற்றிக் கொண்டார்.

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்
படக்குறிப்பு, தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மனோஜ்

நடிகராக அறிமுகமாவதற்கு முன்னர் தென் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளுக்கான பட்டப்படிப்பை முடித்தவர் மனோஜ். தனது இந்த படிப்பே, நடிப்புக்குத் தன்னை தயார்படுத்தியதாக மனோஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பின் 1999 ஆண்டு, தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மனோஜ். இந்தத் திரைப்படம் அவருக்கு வெற்றி தேடித் தரவில்லையென்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இதன் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தம்பிகளில் ஒருவராக முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இதன் பிறகு மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் கடல் பூக்கள் படத்தில் நடிகர் முரளியுடன் இணை நாயகனாக நடித்தார். இதுவும் தோல்விப்படமாக அமைந்தாலும், பாரதிராஜா, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார்.

தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் அல்லி அர்ஜுனா, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வருஷமெல்லாம் வசந்தம், பத்ம மகன் இயக்கத்தில் பல்லவன், பாரதிராஜா இயக்கத்தில் ஈர நிலம். அறிமுக இயக்குநர் டிஜே குமாரின் சாதுர்யன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எதுவும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியினைத் தரவில்லை.

மனோஜின் நிறைவேறாத ஆசை

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

பட மூலாதாரம், FACEBOOK/MANOJ BHARATHIRAJA

படக்குறிப்பு, எந்திரன் படத்தில் ரோபோ கதாபாத்திரத்துக்கான ஸ்டாண்ட் இன் (stand-in) நடிகராகவும் பணியாற்றினார்

தொடர் தோல்விகள் தன்னை மிகவும் பாதித்ததாகக் குறிப்பிட்டிருக்கும் மனோஜ், அதுவே நடுவில் தான் நடிப்பிலிருந்து எடுத்துக் கொண்ட இடைவெளிக்குக் காரணம் என்று கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளே தனக்குத் துணை நின்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் படமாக்க மனோஜ் முயன்றார். ஆனால் அந்தப் படம் தயாரிப்பு நிலைக்குச் செல்லவில்லை. ஒவ்வொரு முறை சிகப்பு ரோஜாக்கள் கதையை கையிலெடுக்கும் போது தனக்குத் தடங்கல்கள் வந்ததாகவும், மேலும் 3 திரைப்படங்களுக்கான கதைகளை எழுதினாலும் அவையும் திரைப்படமாகவில்லை என்பதையும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் மனோஜ்.

இதன் பின் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், சங்கர் இயக்கத்தில் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். எந்திரன் படத்தில் சிட்டி என்கிற ரோபோ கதாபாத்திரத்துக்கான ஸ்டாண்ட் இன் (stand-in) நடிகராகவும் பணியாற்றினார்.

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

பட மூலாதாரம், FACEBOOK/MANOJ BHARATHIRAJA

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், மீண்டும் தந்தை பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி திரைப்படம் படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படமும், இதற்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

2021ஆம் ஆண்டு, சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்த ஈஸ்வரன், பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்த மாநாடு ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் மனோஜ்.

கடைசியாக 2022ஆம் ஆண்டு, முத்தையா இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த விருமன் திரைப்படத்தில், நாயகனின் அண்ணனாக நடித்திருந்தார். இதுவே இவருக்கு நடிகராகக் கடைசி திரைப்படம். இதற்குப் பின் 2024ஆம் ஆண்டு, ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்கிற வெப் சீரியஸ்ஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் முகம்

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

பட மூலாதாரம், FACEBOOK/MANOJ BHARATHIRAJA

பாரதிராஜா நடத்தி வரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு, பவித்ரா என்கிற குறும்படத்தை இயக்கினார் மனோஜ். தனது இயக்கும் திறனை, தனது தந்தையிடம் காட்டவே இதைச் செய்ததாகக் கூறியுள்ளார் மனோஜ். கடைசியாக 2023ஆம் ஆண்டு, சுசீந்திரன் தயாரிப்பில், இளையராஜா இசையில் தனது தந்தை பாரதிராஜா நடிக்க, மார்கழித் திங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மனோஜ். 2006ஆம் ஆண்டு, ஏபிசிடி, கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இசைக் கலைஞர் மனோஜ்

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

எட்டு வயதில் பியனோ பயிற்சியைப் பெற்ற மனோஜ் 12 வயதில் கிடார், கர்நாடக இசைப், ட்ரம்ஸ் என முறையாக இசையைப் பயின்றிருக்கிறார். அவர் நாயகனாக அறிமுகமான தாஜ்மகால் படத்திலேயே, ஈச்சி எலுமிச்சி என்கிற பாடலைப் பாடி, பாடகராகவும் அறிமுகமானார் மனோஜ்.

அதற்கு முன் 1998 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்கிற சுயாதீன பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார் மனோஜ். இதில் நடிகை மீனாவை பாட வைத்திருக்கிறார். இந்த ஆல்பம் 2001ஆம் ஆண்டே வெளியானது. இந்த தொகுப்பில் அவர் பாடியதை வைத்தே ரஹ்மான் அவருக்கு தாஜ்மகால் படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பை வழங்கினார்.

மனோஜ் பாரதிராஜா, மணிரத்னம், எந்திரன், தாஜ்மஹால்

கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மனோஜுக்குக், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், திடீர் மாரடைப்பால் அவர் 25 மார்ச் 2023 அன்று காலமானதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட் அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளரும், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, நடிகை குஷ்பூ, நடிகர் தியாகராஜன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து, அவரது இந்த திடீர் மரணம் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ் ரூம் வெளியீடு

By admin