3
இளவரசர் ஹாரி, தனது தந்தை மன்னர் சார்லஸை இலண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் புதன்கிழமை (10) சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்த முதல் சந்தர்ப்பமாகும்.
கடந்த மாதங்களில் இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.
மே மாதம் பிபிசிக்கு அளித்த நேர்காணலில், இளவரசர் ஹாரி தனது தொனியை மாற்றிக்கொண்டு, “எனது குடும்பத்துடன் நல்லிணக்கம் செய்ய நான் விரும்புகிறேன்,” என்றார்.
“சண்டையைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. வாழ்க்கை விலைமதிப்பற்றது” என்றும் அவர் கூறினார்.
மன்னர் சார்லஸின் தகவல் தொடர்பு இயக்குனர் மற்றும் இளவரசர் ஹாரியின் ஊடகத் தொடர்பு குழுவினரும் இலண்டனில் சந்தித்த புகைப்படம் ஜூலை மாதம் ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியானது.
இரு தரப்பினரும் புகைப்படம் கசிந்ததை மறுத்தாலும், இது இருவருக்கும் இடையே ஓர் உரையாடல் தொடங்கியதைக் காட்டியது.
இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. மன்னர் தனது மகனுடன் தனிப்பட்ட தேநீர் விருந்துடன் சந்திப்பை நடத்தினார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
சந்திப்புக்குப் பிறகு, மன்னர் எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஹாரி “ஆம், அவர் நன்றாக இருக்கிறார்” என்று பதிலளித்தார்.