இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் மரணம் அடைந்தார்.
நேற்றிரவு (டிசம்பர் 26) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. ஆனால் அடிப்படையில் அவர் மிகவும் ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்தவர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் பிரிவினைக்குப் பிறகு உத்தராகண்டில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவருக்கு கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆக்ஸ்ஃபோர்டில் முனைவர் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். டெல்லி பொருளாதாரப் பள்ளியிலும் அவர் பேராசிரியராகப் பணியாற்றியானர்.
பிறகு 1971ஆம் ஆண்டு அவர் இந்திய அரசின் வர்த்தகத்துறையில் பொருளாதார ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். இந்திய அரசுக்கான அவரது பணி அந்த ஆண்டில் இருந்து துவங்கியது. கடந்த 53 ஆண்டுகளாக இந்திய அரசிலும், இந்திய அரசியல் தளத்திலும் அவர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1972ஆம் ஆண்டு மன்மோகன் சிங் நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பிறகு திட்டக் குழுவின் துணைத்தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
இந்தியப் பொருளாதாரம் 1991ஆம் ஆண்டு மிகவும் பின்தங்கியிருந்த சூழலில், அரசியல் தளத்திற்கு வெளியே உள்ள நபரை நிதித்துறைக்கு அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் நரசிம்ம ராவ் இருந்தார்.
நிதி அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியான நபரை அவர் தேட ஆரம்பித்தார். அரசியலுக்கு வெளியே உள்ள ஒருவர்தான் இந்தப் பொறுப்புக்குச் சரியானவர் என்றும் நரசிம்ம ராவ் நம்பினார். ஐ.ஜி.பாட்டீல், மன்மோகன் சிங் என இருவரின் பெயர்கள் அவர் முன் வைக்கப்பட்டன.
மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சி.அலெக்சாண்டரிடம் இந்தத் தகவலை சிங்கிடம் தெரிவித்து, அவரின் ஒப்புதலைப் பெறும் பணிக்காக நியமிக்கப்பட்டார்.
அலெக்ஸாண்டர் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் பணியாற்றினார். இதைத் தன்னுடைய சுயசரிதை புத்தகமான ‘த்ரோ தி காரிடர்ஸ் ஆஃப் பவர்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் 1991ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹ்யூகோவின் பிரபலமான வாசகத்தை மேற்கோள்காட்டி தன்னுடைய உரையை அவர் முடித்தார்.
“ஒருவரின் காலம் கைகூடினால், பூமியில் எந்த சக்தியும் அவரின் சிந்தனைகளை நிறுத்த முடியாது,” என்ற ஹ்யூகோவின் வாசகத்தை அவர் அங்கு பயன்படுத்தினார்.
கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி இந்தியாவின் பொருளாதார சந்தை உலக நாடுகளுக்காகத் திறந்துவிடப்பட்டது.
இந்தப் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவே, 2024ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
மன்மோகன் சிங் உருது மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டிருந்தார். அவருடைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்பான உரைகளை வழங்கினார்.
அவர் நிதி அமைச்சராக இருந்தபோது பாஜக பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.
அப்போது வாஜ்பேய் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்து, “இந்த விமர்சனங்களைத் தனிப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அவர் எதிர்பார்த்திராத பல திருப்புமுனைகளைக் கொண்டிருந்தது.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜகவினர் குறிப்பாக சுஷ்மா ஸ்வராஜ் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்.
“இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பிறகு, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் முக்கியப் பொறுப்பில் பணியாற்றுவார் என்றால் நான் மொட்டை அடித்துக்கொண்டு, செருப்பு அணியாமல், வெள்ளைப் புடவை உடுத்தி, தரையில் தூங்குவேன்,” என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் பாஜகவின் எதிர்ப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சோனியா காந்தி கூட்டணிக் கட்சிகளின் மூத்தத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். கூட்டணி ஆட்சியை உருவாக்கும் முனைப்பில் அவர் இருந்தார்.
மே 17, 2004 அன்று ஜன்பத்தில் அமைந்துள்ள சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்றார் நட்வர் சிங். அங்கே மன்மோகனை பார்க்க அவர் சென்றிருந்தார்.
அப்போது சோனியா, பிரியங்கா, சுமன் துபேய் உள்ளிட்டோரும் அங்கே அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கே வந்த ராகுல் காந்தி, “நீங்கள் பிரதமராகக் கூடாது அம்மா. ஏற்கெனவே எனது தந்தை கொல்லப்பட்டுவிட்டார், பாட்டியும் கொல்லப்பட்டுவிட்டார். இப்போது நீங்கள் பிரதமரானால், ஆறு மாதங்களில் நீங்களும் கொல்லப்படுவீர்கள்” என்று அவர் கூறினார்.
ராகுலின் இந்தக் கருத்துக்குப் பிறகு, நீண்ட ஆலோசனையின் முடிவில் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை.
நேரடியாக தேர்தலில் போட்டியிடாத மன்மோகன் சிங் தொடர்ச்சியாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவே பொற்றுபேற்று வந்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு துவங்கி ஐந்து முறை அசாம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின் 13வது பிரதமராக 2004ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் மன்மோகன். இந்திய பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% முதல் 8% ஆக உயர்ந்தது.
இந்த ஆட்சிக்காலத்தின்போது ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஆர்.டி.ஐ. மூலம் கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்த்தது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தியா – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் மன்மோகன் சிங்குக்கு சவாலாக முடிந்தது.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தனர். அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன. ஆனாலும், சிங்கின் ஆட்சி வெற்றி கண்டது.
இந்தக் காலக்கட்டத்தில் மற்றொமொரு வரலாற்று ரீதியான முடிவை அறிவித்தது மன்மோகன் சிங்கின் அரசாங்கம். அதன்படி, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதிக்கு வந்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவரின் அந்த முடிவால்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக் காலம் சவாலாக இருந்தது.
உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக அறியப்பட்ட சிங்கால் தன்னுடைய ஆட்சியில் நடைபெற்ற மோசடிகளைத் தடுக்க இயலவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டார்.
ஆனால், மன்மோகன் சிங் உலக அரங்கில் ஒரு மகத்தான பொருளாதார நிபுணராக அறியப்படுகிறார்.
இந்திய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல் செய்திகளைத் தெரிவித்து வருகின்றனர். வெள்ளை மாளிகை தன்னுடைய இரங்கல் செய்தியை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) வெளியிட்டது.
டிசம்பர் 28ஆம் தேதியன்று மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.