இன்றைய தினம் (27/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
கேரளா சபரிமலை கோவிலில் சக நடிகர் மம்மூட்டிக்காக நடிக ர் மோகன்லால் பிரார்த்தனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மம்மூட்டியின் சம்மதத்துடன் இந்த செயல் செய்யப்பட்டிருந்தால், அது இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணானது என்று, இஸ்லாமிய சமூகத் தலைவர்கள் சிலர் கூறியதாக, ஆங்கில நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
“கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று நடிகர் மோகன்லால், நடிகர் மம்மூட்டி சார்பாக சபரிமலை கோவிலில் ‘உஷா பூஜை’ நடத்தியபோது இந்த சர்ச்சை எழுந்தது. மம்மூட்டியின் பெயர் மற்றும் அவர் பிறந்த நட்சத்திரம் (விசாகம்) உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய காணிக்கை ரசீது வைரலானது. இந்த செயலை இரண்டு நடிகர்களுக்கும் இடையிலான நட்பின் பிரதிபலிப்பாக பலர் பார்த்தாலும், சில அமைப்புகள் இதனை விமர்சித்தன. ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடைய மத்யமம் என்ற நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஓ. அப்துல்லா, இந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் விமரசித்தார்”, என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“மம்மூட்டி தெரிந்தே இந்த பிரார்த்தனையை செய்ய சொல்லி இருந்தால், அவர் இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆனால் மோகன்லால் தானாக முன்வந்து மம்மூட்டிக்காக இவ்வாறு செய்திருந்தால் அதில் பிரச்னை இல்லை என்று அப்துல்லா தெரிவித்தார். இருப்பினும், முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து வந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து, அப்துல்லா தனது பதிவை நீக்கினார்”, என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.
“இந்த சர்ச்சைக்கு பதிலளித்த மோகன்லால், ஒரு திரைப்பட பிரமோஷன் நேர்காணலின் போது இந்த பிரச்னையை பற்றி பேசினார், அந்த பூஜையை தனது நண்பருக்காக அவர் செய்த தனிப்பட்ட பிரார்த்தனை என்று மோகன்லால் தெரிவித்தார். கோவில் அதிகாரிகள் காணிக்கை ரசீதை பொதுவெளியில் கசியவிட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார், ஆனால் அந்த ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும் ஒரு பகுதிதான் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்”, என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ரூ. 10 லட்சத்துக்காக பள்ளி மாணவனை கடத்தி கொன்றதாக 3 சிறுவர்கள் மீது புகார்
டெல்லியில் 10 லட்சம் ரூபாய்க்காக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“வடக்கு டெல்லி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரின் மகனை, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 2 சிறுவர்கள் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. மாணவரின் பெற்றோர் அவரை தேடுவதற்கு முயற்சி செய்தனர். இந்நிலையில்,நள்ளிரவில் அவரது தாய்க்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘உங்கள் மகனை விடுவிக்க வேண்டும் என்றால் 3 நாட்களுக்குள் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும்’ என்று கூறியதாக”, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், காவல்துறையினரும் அவரை தேடி வந்தனர். இதனிடையே, பலஸ்வா ஏரிப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அறிந்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்ததில், அந்த மாணவருடையதுதான் என்று அங்க அடையாளங்களை வைத்து உறுதிப்படுத்தினர். இதன் பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது”, என்கிறது அந்த செய்தி.
மேலும் தினத்தந்தியின் அச்செய்தியில், “காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவர் கடைசியாக ஜரோடா புஷ்டா சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுடன் சென்றது தெரியவந்தது. அந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என்று மாணவரின் தாய் அடையாளம் காட்டினார். காவல்துறையினர் அந்த இரண்டு சிறுவர்களையும் தவிர இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு சிறுவனையும் கைது செய்தனர்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான மூன்று சிறுவர்களும், தங்களுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த மாணவரை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டதாகவும், மாணவரை விடுவித்தால் அவர் தங்களை காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தில் அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர் என்கிறது அந்த செய்தி.
பட மூலாதாரம், Getty Images
உயர் நீதிமன்றத்தின் கருத்து மனிதத்தன்மை அற்றது – உச்ச நீதிமன்றம் கண்டனம்
சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் அலகாபாத் உயர் நீதிமண்டத்தின் கருத்து மனிதத்தன்மை அற்றது என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என, தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“உத்தரப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு, 14 வயது சிறுமி ஒருவர், அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக, அவர்கள் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்மன் அனுப்பினார். இந்த சம்மனுக்கு எதிராக அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்”, என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, கடந்த மார்ச் 17 ஆம் தேதி அன்று, ‘வெறுமனே பெண்ணின் மார்பை பிடிப்பதும், கால்சட்டையின் நாடாவை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என தீர்ப்பில் தெரிவித்தார். நீதிபதியின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பியது”, என்கிறது அச்செய்தி.
“அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. நீதிபதிகள் கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு நேற்று இந்த விவகாரத்தை விசாரித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது எனக்கூறிய நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். ‘இந்த தீர்ப்பு மிகவும் மனிதத் தன்மையற்றதாகவும், நீதிபதியின் முழுமையான உணர்வின்மையை காட்டுவதாகவும் இருக்கிறது’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதாக”, தினத்தந்தியின் செய்தி கூறுகிறது.
“இந்த விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது என்கிறது அந்த செய்தி.
பட மூலாதாரம், X/@sivasankar1ss
படக்குறிப்பு, அமைச்சர் சா. சி. சிவசங்கர்
புதிய சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகம்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்ககியுள்ள புதிய சிங்கார சென்னை பயண அட்டையை தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
“சென்னையில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை மூலம் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்டவற்றில் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அனைத்துப் பயணிகளும் சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டையை எளிதாக பெற்று பயன்படுத்தும் வகையிலும், மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலும், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை மாநகர போக்குவரத்துக்கழகம் தொடங்கியுள்ளது”, என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்த திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் நேற்று (மார்ச் 26) அறிமுகம் செய்து வைத்தார். சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பயணிகள் பயன்பாடு அதிகமுள்ள பேருந்து நிறுத்தங்களிலும், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி இந்த புதிய சிங்கார சென்னை பயண அட்டையை வழங்கும்.
இதை 100 ரூபாய் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம், இதில் 50 ரூபாய்க்கு பயணம் செய்யலாம். இந்த அட்டையை இணையவழி சேவை, கைப்பேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமும் எளிதாக ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும்”, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை பயண அட்டையில் ஏற்கெனவே 20 பயண நடைகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்யும் முறை மாற்றப்பட்டது, எண்ணிக்கையற்ற பயண நடைகள் மேற்கொள்ள ஏதுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரீசார்ஜ் செய்தபின் இந்த அட்டையை புதுப்பிக்க என, எஃப்.சி தொழில்நுட்பம் கொண்ட கைபேசிகள் மூலம் தாமாகவே ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் புதுப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது”, என்கிறது அந்த தினமணி செய்தி.
பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் 239 சட்ட விரோத மது விற்பனையாளர்கள்
இலங்கையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது
“முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேச செயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்”, என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் திட்டமிட்டு போதைபொருள் ஊடுருவல்களை எமது பகுதிகளில் மேற்கொள்வதாகவும் மக்களால் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஆளுநர், கூட்டுறவுப் பிரதியமைச்சர், ஏனைய நாடாளுமன்றஉறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், உரிய அதிகாரிகள் அனைவருமாக இந்த விடயம் தொடர்பில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இத்தகைய போதைப்பொருள் ஊடுருவல்கள், பாவனைகளைத் தடுக்க வேண்டும்.
இந்நிலைமை தொடர்ந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் மக்கள் வெறுக்க வேண்டிய மக்கள் வெறுக்கக்கூடிய நிலை உருவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சட்டவிரோத போதைப் பொருட்களை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.