பட மூலாதாரம், AFP via Getty Images
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் உதவியுடன் மரணமில்லா வாழ்வை பெற முடியுமா? இது தான், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பெய்ஜிங்கில் ஒரு ராணுவ அணிவகுப்பில் இந்த வாரம் சந்தித்தபோது பேசிக்கொண்டதாகும்.
புதின் சார்பாக மாண்டரின் மொழியில் சீன அதிபரிடம் பேசிய ஒரு மொழிபெயர்ப்பாளர், மனித உறுப்புகளை மீண்டும் மீண்டும் மாற்ற முடியும், இதனால் ஒருவர் வயதானாலும் மேலும் மேலும் இளமையாக இருக்க முடியும். முதுமையை “காலவரையின்றி தடுக்க” முடியும் என்று கூறினார்.
“இந்த நூற்றாண்டில் 150 வயது வரை வாழ முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அவர்களின் புன்னகையும் சிரிப்பையும் பார்க்கும் போது இது விளையாட்டாக பேசப்பட்டதாக தெரியலாம். ஆனால் இதில் உண்மை இருக்குமா?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நிச்சயமாக உயிர்களைக் காப்பாற்றுகின்றன – பிரிட்டனில், கடந்த 30 ஆண்டுகளில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பிரிட்டனின் என்.எச்.எஸ். ரத்தம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு கூறுகிறது.
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மாற்று உறுப்புகளை மனிதர்களின் உடலில் நீண்ட காலம் நீடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சில நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அந்த உறுப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்கிறது.
ஒரு உறுப்பின் ஆயுட்காலம் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது – மேலும் அவர்கள் அதை எவ்வளவு நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் என்பதையும் பொறுத்ததாகும்.
உதாரணமாக, உயிருள்ள நன்கொடையாளரிடமிருந்து நீங்கள் ஒரு புதிய சிறுநீரகத்தைப் பெற்றிருந்தால், அது 20 முதல் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இறந்த நன்கொடையாளரிடமிருந்து நீங்கள் அதைப் பெற்றால், அது 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்யலாம்.
எந்த உறுப்பு என்பதும் முக்கியமானது.
ஒரு கல்லீரல் சுமார் 20 ஆண்டுகளும், இதயம் 15 ஆண்டுகளும், நுரையீரல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளும் நீடிக்கும் என்று ஜர்னல் ஆஃப் மெடிக்கல் எகனாமிக்ஸில் (மருத்துவ பொருளாதார இதழ்) வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
மரணமில்லா வாழ்வுக்கான வழியா?
புதினும் ஷியும் பல உறுப்புகளை, மறுபடி மறுபடி மாற்றுவது குறித்து பேசியிருக்கலாம்.
ஒரு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வது என்பது, குறிப்பிடத்தக்க ஆபத்துகள் நிறைந்த பெரிய விசயமாகும். ஒவ்வொரு முறை அறுவை சிகிச்சை செய்யப்படும் போதும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத ஆபத்து தான் அது.
தற்போதைய நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள், அந்த புதிய உறுப்பை உடல் மறுக்காமல் தவிர்க்க, வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பக்க விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம், தொற்றுகள் ஏ ற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கலாம்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ள உறுப்பை, உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, மற்றொரு நபரிடமிருந்து வந்த அந்நிய உறுப்பாக கருதி தாக்கக் கூடும். இதுவே உறுப்பு மறுப்பு அல்லது நிராகரிப்பாகும். இதை தவிர்க்கவே, நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சில சமயம், மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உறுப்பு மறுப்பு ஏற்படலாம்.
தனிநபருக்கு தகவமைக்கப்படும் உறுப்புகள்
மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை நன்கொடையாளர்களாக பயன்படுத்தி, நிராகரிப்பு இல்லாத உறுப்புகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கிரிஸ்பர் எனப்படும் மரபணு திருத்த கருவியைப் பயன்படுத்தி சில பன்றி மரபணுக்களை அகற்றி, சில மனித மரபணுக்களை சேர்த்து உறுப்பை மனித உடலுக்கு மிகவும் இணக்கமாக்குகிறார்கள்.
இதற்காக சிறப்பு பன்றிகளை இனப்பெருக்கம் செய்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் அவற்றின் உறுப்புகள் தோராயமாக மனிதர்களுக்கு சரியான அளவில் இருக்கும்.
பன்றிகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவதில், அறிவியல் இப்போதும் தீவிர சோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. ஆனால் ஒரு இதயம் மற்றும் சிறுநீரக மாற்றும் அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட இருவர் இந்த புதிய உறுப்பு மாற்று மருத்துவத் துறையின் முன்னோடிகள் ஆகியுள்ளனர்.
இரண்டு பேருமே இறந்துவிட்டனர், ஆனால் உயிருள்ள செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றி பொருத்தும் அறிவியலை (xenotransplantation) முன்னெடுக்க உதவினர்.
இதில் ஆராயப்படும் மற்றொரு வழி நமது சொந்த மனித உயிரணுக்களைப் பயன்படுத்தி புதிய உறுப்புகளை வளர்ப்பது.
ஸ்டெம் செல்கள் உடலில் காணப்படும் எந்த வகையான செல் அல்லது திசுக்களாகவும் வளரும் திறனைக் கொண்டுள்ளன.
எந்தவொரு ஆராய்ச்சிக் குழுவும் இதுவரை முழுமையாக செயல்படும், உறுப்பு மாற்று செய்யக்கூடிய மனித உறுப்புகளை புதிதாக உருவாக்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானிகள் அதை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிசம்பர் 2020 -ல், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் யு.சி.எல் மற்றும் பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் ஆகியவை மனித ஸ்டெம் செல்கள் மற்றும் பயோஎன்ஜினியரிங் சாரக்கட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு முக்கிய உறுப்பான மனித தைமஸை உருவாக்கின.
ஒரு சோதனையாக எலிகளுக்கு உறுப்புமாற்றம் செய்யப்பட்டபோது, அது வேலை செய்வதாகத் தோன்றியது.
லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் விஞ்ஞானிகள், நோயாளியின் திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மனித குடலின் ஒரு பகுதியை வளர்த்ததாகக் கூறுகின்றனர். இது எதிர்காலத்தில் குடல் செயலிழப்பு கொண்ட குழந்தைகளுக்கு தனிப்பட்ட மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும்.
ஆனால் இந்த முன்னேற்றங்கள் மக்களை 150 வயது வரை உயிருடன் வைத்திருப்பதை விட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே உள்ளன.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
இதற்கிடையில், தொழில்நுட்ப தொழில்முனைவோர் பிரையன் ஜான்சன், தனது உயிரியல் வயதைக் குறைக்கும் முயற்சியில் ஆண்டுக்கு பல லட்சங்கள் செலவிடுகிறார்.
நமக்குத் தெரிந்தவரை அவர் இன்னும் புதிய உறுப்புகளைப் பெற முயற்சிக்கவில்லை, ஆனால் தனது 17 வயது மகனின் பிளாஸ்மாவை தன் உடலில் செலுத்தியுள்ளார்.
ஆனால் அதனால் எந்த பலனும் கிடைக்காததாலும், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் போன்ற அமைப்புகளின் தீவிர கண்காணிப்பு காரணமாகவும் பின்னர் அவர் அதை நிறுத்திவிட்டார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் முட்ஸ் கூறுகையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அப்பால், பிளாஸ்மா மாற்று போன்ற அணுகுமுறைகள் ஆராயப்படுகின்றன, ஆனால் இவை சோதனை கட்டத்திலேயே உள்ளன என்கிறார்.
“இத்தகைய உத்திகள் ஆயுட்காலத்தில், குறிப்பாக அதிகபட்ச மனித ஆயுட்காலம் ஆகியவற்றில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெரியாது, இருப்பினும் இது குறிப்பிடத்தக்க அறிவியல் ஆர்வமுள்ள துறையாகும்” என்கிறார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ரோஸ்லின் இன்ஸ்டிடியூட்டின் நோயெதிர்ப்பு நோயியல் நிபுணர் பேராசிரியர் நீல் மாபோட், 125 வயது வரை வாழ்வது அதிகபட்ச வரம்பாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்.
1875 முதல் 1997 வரை 122 ஆண்டுகள் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் கால்மென்ட் என்பவரே உயிருடன் இருந்த மிக வயதான நபர் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
சேதமடைந்த மற்றும் நோயுற்ற உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகளால் மாற்றப்படலாம் என்றாலும், நாம் வயதாகும்போது நம் உடல் மிகவும் குறைவான நெகிழ்திறன் அல்லது உடல் அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக மாறுகிறது.
“நாம் தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் திறன் குறைய தொடங்கும். நமது உடல்கள் மிகவும் பலவீனமாகும், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும், மீள் தன்மையும் குணமடையும் திறனும் குறையும்” என்று பேராசிரியர் மாபோட் கூறுகிறார்.
மேலும் “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மன அழுத்தம், அதிர்ச்சி மற்றும் தாக்கம், மாற்று உறுப்புகளை நிராகரிப்பதைத் தடுக்க தேவையான நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவை முதிர்ந்த நோயாளிகளுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும்.” என்கிறார்.
ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் கவனம் செலுத்துவதை விட, ஆரோக்கியமான ஆண்டுகள் வாழ நாம் முயல வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
பேராசிரியர் மாபோட் கூறுகையில்; “நீண்ட காலம் வாழ்ந்து, ஆனால் வயதாவதுடன் வரக்கூடிய பல நோய்களால் பாதிக்கப்படுவது, திசு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவது என என் ஓய்வுக்காலத்தை நான் செலவிட விரும்பவில்லை!” என்கிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு