2
இங்கிலாந்தில் பலவீனமான Raac கான்கிரீட்டால் கட்டப்பட்ட மருத்துவமனைகளைச் சீரமைக்கும் பணிகள், அரசாங்கம் நிர்ணயித்த 2030ஆம் ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிவடையாது என்று புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்த மருத்துவமனைகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர 2032 அல்லது 2033 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Raac கான்கிரீட் என்பது சாதாரண கான்கிரீட்டைவிட உறுதி குறைந்தது. குமிழி போன்ற அமைப்பில் நீர் புகுவதால், காலப்போக்கில் கட்டிடப் பொருள் பலவீனமடைந்து இடிந்து விழும் அபாயம் உருவாகிறது. இதன் காரணமாக, பல மருத்துவமனைகளில் மேற்கூரைகள் தற்போது இரும்புத் தூண்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகள் பாதுகாப்பற்றவை எனக் கருதப்பட்டு, மூடப்பட்டும் உள்ளன.
இந்த நிலைமையை சமாளிக்க, மருத்துவமனைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவே சுகாதாரத் துறையினர் பெரும் பராமரிப்புச் செலவுகளைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக West Suffolk மற்றும் King’s Lynn பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் கட்டிடங்களை நிலைநிறுத்த அதிக நிதியை ஒதுக்க வேண்டிய சூழலில் உள்ளன. 2025ஆம் ஆண்டுக்குள் 7 முக்கிய மருத்துவமனைகளில் கட்டமைப்புச் சிதைவைத் தடுக்க மட்டும் 500 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் முன்வைத்த “2030க்குள் 40 புதிய மருத்துவமனைகள்” என்ற வாக்குறுதி நடைமுறையில் சாத்தியமற்றது என்று சுகாதாரச் செயலாளர் Wes Streeting தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Royal College of Surgeons தலைவர் டிம் மிட்செல் (Tim Mitchell), பழைய கட்டிடங்களைத் தற்காலிகமாகச் சீரமைப்பதற்காக நிதியைச் செலவிடுவதற்குப் பதிலாக, அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை உருவாக்க அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நோயாளிகள் தேவையான மருத்துவ வசதிகளுக்காக இன்னும் ஒரு தசாப்தம் காத்திருக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
2035ஆம் ஆண்டிற்குள் அனைத்து Raac கான்கிரீட்டுகளையும் அகற்றும் இலக்கை சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை நிர்ணயித்துள்ளது. இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் 1.6 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை 20 இடங்களில் இந்த அபாயகரமான கான்கிரீட் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

