• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

Byadmin

Aug 24, 2025


அரச நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றுக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அநுர அரசாங்கத்தால் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுரவால் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், “சந்தேகநபர் (விக்ரமசிங்க) செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார். ஆனால், அவரது மருத்துவ நிலையைக் கருத்தில்கொண்டு அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லது வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கலாம்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி : ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல்!

ரணில் விக்கிரமசிங்க, இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியிருந்தனர். மேலும், சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவரது சட்டத்தரணிகள் பிணை மணு கோரிக்கையில் வலியுறுத்தியிருந்தனர்.

76 வயதான ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இலண்டனுக்குச் சென்றமை குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவியின் பயணச் செலவுகளை 10 பேர் கொண்ட குழுவுடன் தனிப்பட்ட பயணமாக மேற்கொண்டதற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச பணத்தைப் பயன்படுத்தியதாக சிஐடி குற்றம் சாட்டியது. அதில் மெய்க்காப்பாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவும் அடங்கும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பஸ்ஸில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin