• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

மருத்துவர் மீது தாக்குதலால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு | Indefinite strike protest against attack on Chennai doctor:  TNGDA announcement

Byadmin

Nov 13, 2024


மதுரை: சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.

சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக மருத்துவர்கள் மீதான தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடுமையான மருத்துவ சட்டங்களால் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது, ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறையவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துர்கள் சங்கத்திடம் பேசிவருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

நடந்தது என்ன? – சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

‘சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார்’ என்றும அவர் கூறினார். | முழுமையாக வாசிக்க > மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியது யார்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.



By admin