0
தேசிய சுகாதார சேவை (NHS) சிகிச்சையைப் பெறுவதற்காக நோயுற்ற மற்றும் காயமடைந்த பாலஸ்தீனக் குழந்தைகளில் முதல் குழுவினர், காசாவிலிருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுவிட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் இங்கிலாந்து வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது, இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், உள்துறை அலுவலகம் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்தக் குழந்தைகள் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை டெய்லி மிரர் பத்திரிகையின் நேர்காணலில் வெளிநாட்டுச் செயலாளர் Yvette Cooper உறுதிப்படுத்தினார்.
ஒரு வெளியுறவு அலுவலக அதிகாரி, பிபிசியிடம் இந்தச் செய்தி சரியானது என்றும், குழந்தைகள் எதிர்வரும் நாட்களில் இங்கிலாந்து வந்தடைய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த முதல் குழுவின் சரியான எண்ணிக்கை எவ்வளவு என்று கூப்பர் உறுதிப்படுத்தவில்லை. என்றாலும், பிபிசி தகவலின்படி, இது 30 முதல் 50 பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களும் துணையாக வரலாம் என்று மிரர் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
கூப்பரின் நேர்காணலில், “அவர்கள் காசாவிலிருந்து வெளியேற உதவும் வகையில் நிறைய இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.
காயமடைந்த குடும்பங்களுக்கு உதவவும், இந்த இலையுதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர உதவவும் தான் உறுதியாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
Project Pure Hope இன் முன்முயற்சி மூலம் சில காசா குழந்தைகள் தனியார் முறையில் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த மோதலின் போது இங்கிலாந்து அரசு தனது சொந்தத் திட்டத்தின் கீழ் யாரையும் வெளியேற்றியது இதுவே முதல் முறையாகும்.