5
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவாகி 1991 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நவீன தொழில் நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படுகிறது.
இதற்கான முயற்சிகளை ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கடேசன் மேற்கொண்டிருக்கிறார் . இதற்காக படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தினை படக் குழுவினர் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீடாக வெளியாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் திரையுலகினர் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் கேப்டன் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன் பேசுகையில், ” தமிழ் சினிமாவின் எவர் கிரீன் படம் தான் ‘கேப்டன் பிரபாகரன்’. இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்த பிறகு வெளியாவதால் இதை அவரது முதல் படம் போல் நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 150க்கும் மேற்பட்ட படங்களை இனி ஒவ்வொரு வருடமும் இன்றைய தலைமுறையினருக்காக மறு வெளியீடு செய்யப்படும்” என்றார்.