10
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் “பறக்கும் மருத்துவர்” (Flying Doctor) அவசர மருத்துவ சேவைப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், மருத்துவ ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளும் அரச செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளன.
சரவாக் மாநிலத்தின் லோங் லெலாங் விமான நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் விமானி மற்றும் சுகாதார அமைச்சின் நான்கு ஊழியர்கள் பயணித்ததாக சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அஹமட் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் மருத்துவ அதிகாரி, உதவி மருத்துவ அதிகாரி மற்றும் கடமையில் இருந்த இரண்டு தாதியர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதை மிரி பகுதிக்கான அனர்த்த முகாமைத்துவக் குழு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிராமப்புற மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவ சிகிச்சை, அவசர கால இடமாற்றம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இத்தகைய பறக்கும் மருத்துவ சேவைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அப்பகுதியில் நிலவிய அடர்ந்த புகை மூட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகளில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், வான்வழி சேவைகளைப் பயன்படுத்துவது தடைப்பட்டிருந்ததாகவும் சரவாக் பொலிஸ் ஆணையாளர் முஹம்மது ஜைனல் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடம் மிகவும் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளதால், தரைவழியாக அங்கு சென்றடைவதற்கு சுமார் 10 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து அமைச்சின் விமான விபத்துகள் விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.