0
மலேசியாவில் 9 மாநிலங்களில் திடீரென ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அம்மாநில சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை தொடர்ந்து பெய்வதால் நிலைமை மோசமடையும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள 9 மாநிலங்களில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் சுமார் 90 தற்காலிகத் தங்குமிடங்களைத் திறந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான கிளாந்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கெடா (Kedah), பினாங்கு (Penang), பேராக் (Perak), பெர்லிஸ் (Perlis), திரெங்கானு (Terengganu), சிலாங்கூர் (Selangor) மற்றும் சரவாக் (Sarawak) ஆகிய மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில், அதிகாரிகளின் அறிவுரைகளைக் குடியிருப்பாளர்கள் பின்பற்றவேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் பல இடங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சில வீதிகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக NKVE நெடுஞ்சாலைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளைச் சுற்றிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாகப் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.