• Sat. Dec 13th, 2025

24×7 Live News

Apdin News

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வேண்டும் | அருட்தந்தை சத்திவேல்

Byadmin

Dec 13, 2025


மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன்.

ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு.

மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க  மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார்.

இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல்.

அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு.

மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது.

அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே.

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும்.

மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும்.

தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது.

நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார்.

By admin