0
மலையக மண்ணின் மைந்தன், பாமர மக்களின் உணர்வுகளை எழுத்தின் வழியாக உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் நூல் வெளியீடு கடந்த வாரம் சிட்னியில் சிறப்புற நடைபெற்றது.
பல்வேறு எழுத்துப் படைப்புகளுக்கு சாகித்திய விருது, தமிழக அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற
மாத்தளை சோமுவின் “100 சிறுகதைகள்” தொகுப்பு நூல்
சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30/11/2025) மாலை சிட்னியில் உள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
மாத்தளை சோமு அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாக தனது எழுத்துப்பணியை சமூக நோக்கோடு செய்துவருபவர். அவரது இலக்கிய முயற்சிகளின் சிகரமாக மாத்தளை சோமுவின் நூறு சிறுகதைகள் தொகுப்பு நூல் சிட்னியில் வெளியானது.
ஆடை நூல் மானத்தைக் காத்து உயர்த்தும். புத்தக நூல் அறிவை மேம்படுத்தி மனிதனாக்கும் என்பதற்கு மாத்தளை சோமுவின் படைப்புக்கள்,
புலம்பெயர் தமிழர்களின் அடையாளமாக விளங்குகிறது. அவரின் படைப்புகள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. மலையக மக்களின் வாழ்வியலை வரலாற்றின் ஊடாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இளம் வயதிலிருந்தே தமிழ்ச் சமூகத்தின் களத்தில் எழுத்தின் மூலம் போராடி வந்தவர் மாத்தளை சோமு. தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க இயலாத, ஆனால் கொண்டாட மறந்த ஒரு முழுநேரப் படைப்பாளியாக அவர் கருதப்படுகிறார். தமிழ் மண்ணில் இடம்பெயர்வு, துயரம், எதிர்ப்பு, நம்பிக்கை இவை அனைத்தையும் நேரில் அனுபவித்து தனது படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருகிறார்.
மலையக எழுத்தின் முன்னோடியான அவரது அனுபவங்கள், நினைவுகள், எதிரொலிகள், அனைத்தும் இப்போது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளன.இன்றைய தலைமுறை சொல்ல மறந்த கதைகள், அடுத்த தலைமுறை கேட்க வேண்டிய கேள்விகள் பலவும் இந்நூலின் மூலம் வெளிப்படுகின்றன.
தமிழறிஞர் ம.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டில், விழாவில் வரவேற்புரையை தமிழ் ஆர்வலர் திரு. வசந்தராஜா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து வாழ்த்துரைகளை கலாபூசணம் நா.வை.குமரிவேந்தன், எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா ஆகியோர் உரையாற்றினர்.
மலையகச் சிறுகதைகள் பற்றிய ஆய்வுரையை பிரபல ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்களும்,
போர்க்காலச் சிறுகதைகள் ஆய்வுரையை நூல் நேசர் நந்தன் தர்மபாலன் அவர்களும், புலம்பெயர் வாழ்வு சிறுகதைகள் பற்றி செல்வன் அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன் அவர்களும் உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் படைப்பாளி மாத்தளை சோமு பதிலுரையை வழங்கினார். இந் நூல் வெளியீட்டு நிகழ்ச்சித் தொகுப்பை திருமதி காந்திமதி தினகரன் தொகுத்து வழங்கினார். சிட்னி தமிழ் இலக்கிய உலகம் ஒன்றிணையும் ஒரு இனிய மாலையாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா