• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

“மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை | TN govt will deal with the effects of rain in an appropriate manner says Governor

Byadmin

Oct 16, 2024


மேட்டூர்: மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கௌரவிக்கும் விழா இன்று (அக்.15) நடந்தது. இந்த விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றினார். மகாசமஸ்தான ஸ்ரீ காயத்ரிபீட பீடாதிபதி தேவாங்ககுல ஜெகத்குரு மஹாராஜ் ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிஜி முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறந்த மூத்த நெசவாளர்கள் 100 பேருக்கு சால்வை அணிவித்து, 45 நிமிடங்களுக்கும் மேலாக நின்றபடியே விருதுகளை வழங்கினார்.

முன்னதாக, மேச்சேரி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெசவாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற, ஆளுநர் கைத்தறியில் பட்டுச் சேலை நெசவு செய்து அசத்தினார். இதனை பார்த்த நெவாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர், நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது, நெசவாளர்கள் சேலம் பகுதி நெசவாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், பத்ரகாளியம்மன் கோவிலில் ஆளுநர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: “மேச்சேரி கிராம மக்கள் அளித்த அன்பும், வரவேற்பும் மனதை நெகிழ வைத்தது. இந்தப் பகுதிக்கு நீண்ட காலமாக வராமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன். அனைத்து மனிதர்களுக்கும் ஆடையளிக்கும் நெசவாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிகளை உற்பத்தி செய்தவற்கும், உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் இந்திய நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து ஜவுளிப் பொருட்கள் பிறநாடுகளுக்கு வணிகம் செய்தது தொடர்பாக, ரோம பேரரசின் குறிப்பில் உள்ளது. மிகப்பெரிய ரோமப் பேரரசு நம்முடன் விரும்பி வணிகம் செய்தது. வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 55 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களை பண்டமாற்று முறையில் கொடுத்து ஜவுளிப் பொருட்கள், பட்டு சேலைகளை வாங்கியுள்ளனர்.

இன்றைக்கு உள்ள காலத்தில் நெசவு தொழிலில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளதை நெசவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கைத்தறி நெசவாளர்களின் நலன் மீது அக்கறை காட்டி வருகிறார். இளைஞர்கள் நெசவுத் தொழிலுக்கு வருவதற்கு ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். நெசவுத் தொழிலுக்கு ஈடாக உலகின் சிறந்த தொழில் இல்லை. நெசவாளர்களின் கைகளால் உருவாக்கப்படும் பொருட்கள், மனிதனின் மனதிற்கு நேரடியாக சென்றடைகிறது. இளைஞர்கள் பணத்தை நோக்கி மட்டும் செல்லாமல், இந்த தொழிலை அர்ப்பணிப்போடு தொடர வேண்டும்.

நெசவாளர்கள் உருவாக்கும் ஆடைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கடவுளுக்கு பயன்படுகிறது. நெசவாளர்கள் நிறைந்த மேச்சேரிக்கு வந்தது, தெய்வீக அனுபவத்தை தருகிறது. நெசவாளர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசு மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நெசவாளருக்கு விருது வழங்கும் போதும், அவர்களின் எளிமை, அர்ப்பணிப்பு, தொழிலில் நேர்மை எனக்கு தெய்வீக அனுபவத்தை வழங்கியுள்ளது. மேச்சேரி மக்கள் அளித்த அனுபவம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது” இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: “மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. எதிர்பார்த்ததை போல அடுத்த 2 நாளுக்கு மழைப் பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளையும் அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.



By admin