• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

Byadmin

Oct 13, 2025


மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் குறித்த பேச்சுகள் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள நிலையில், ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் போதே ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியாது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மாத்திரம் தான் தேர்தலை எப்படி நடத்தவது என்று தெரியும். ஏனெனில் மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை.

அவ்வாறிருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவால் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்று கோஷமிடுபவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலை ஒத்திவைக்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே ஆணைக்குழுவால் ஒன்று செய்ய இயலாது.

தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரனை ஒன்றை நிறைவேற்றினால் போதுமானது. ஆனால் இலங்கையின் தேர்தல்களின் புதிய முன்னேற்றங்கள் குறித்து பேசி விட்டு மீண்டும் பழைமையான முறைமைக்கு செல்வது எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும். மாகாண சபை தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை குறித்து பேசுகின்றனர். அவ்வாறாயின் கலப்பு உறுப்பினர் விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறைமை குறித்து ஏன் பேச வேண்டும்.

எனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என்றார்.

By admin