• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ் – வழக்கு முடித்துவைப்பு | High Court withdraws government order to build resort using Masani Amman Temple funds

Byadmin

Mar 15, 2025


சென்னை: மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.100 கோடி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே ரிசார்ட் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அரசாணையும் வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகன்நாத், கோயில் நிதியை கோயில் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டுமென பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை மீறும் வகையில் தற்போது மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும் என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஊட்டியில் பக்தர்களுக்கான தங்குமிடம் கட்டப்படும் என்பதற்குப் பதிலாக தவறுதலாக ரிசார்ட் என் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. எனவே இது தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்படும் என்றார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.



By admin