• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

Byadmin

May 9, 2025


கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

கொலன்னாவை – வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர்  தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.

இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By admin