அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மை தன்மையை ஆராய்ந்து ஆசிரியர்கள் பணி நீக்கம் மட்டும் செய்யப்படாமல், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அரசு பள்ளியின் 60-ம் ஆண்டு மலரை வெளியிட்டார். இந்த விழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “தமிழகத்தில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்களின்படி மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், மத்திய அரசு தரப்பில் வழங்க வேண்டிய நிதியைத்தான் வழங்காமல் உள்ளது. நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கூட முறையான நிதியை வழங்கவில்லை” என்றார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு அரசு பள்ளியிலும், மாணவர் மனசு என்னும் பெட்டி வைத்துள்ளோம். எனினும், மாணவர்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வு காரணமாக அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அப்படி இருந்தும், அரசு பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மைகளை விசாரணை செய்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நபர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி அது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம், மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல், சித்தாலப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள், பள்ளியில் உள்ள தண்ணீரை குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அறிந்தேன். இதுகுறித்து, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில், தொடக்க பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம். அதிநவீன ஆய்வுக்கூடங்களை, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கொண்டு வந்துள்ளோம். 10 லட்சம் மாணவர்களுக்கு டேப் (TAB) கொடுப்பதை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் 40 லட்சம் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.