சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை திருப்பி கொடுக்க தனிப்படை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் எம்.அசீப் மற்றும் சில பத்திரிகையாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.பாலு, ஜோதிமணியன், இளங்கோவன், அருண், விவேகானந்தன் ஆகியோர் ஆஜராகி வெளியான செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் முதல் தகவல் அறிக்கையை பொதுதளத்தில் பதிவேற்றம் செய்த போலீஸார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் வழக்குக்கு தொடர்பில்லாத 56 கேள்விகளை செய்தியாளர்களிடம் கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர், என வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ‘‘ முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை துன்புறுத்தும் எண்ணம் இல்லை, என்றார்.
அதையடுத்து நீதிபதி, முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதா?. பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து தனிப்பட்ட குடும்ப விவரங்களை கோருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பின்னர் விசாரணை என்ற பெயரில் பத்திதிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும். அதேபோல பத்திரிகையாளர்களும் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
பத்திரிகையாளர்களின் உரிமை: பத்திரிகையாளர்களின் செல்போன் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ‘இந்து’ என்.ராம் ஒரு நேர்காணலில் கூறியதாவது: இந்தியாவில் இவ்வாறு பொருட்களை கைப்பற்ற தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக காவல் துறையினர் கருதுகின்றனர். அப்படி அவர்களுக்கு பிரத்யேக அதிகாரம் இல்லை என்று பத்திரிகையாளர்கள்தான் சவால் விட வேண்டும். பத்திரிகையாளர்களின் போனில் பல தனிப்பட்ட தகவல்கள், ரகசியம் காக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருக்கும்.
கிரைம் ரிப்போர்ட்டர் ஒரு செய்தி சேகரிக்கும்போது, அதுபற்றிய விவரங்களை அதில் சேமித்து வைத்திருப்பார். அவருக்கு தகவல் கொடுப்பவர்களை அவர் பாதுகாக்க வேண்டும். அதற்கான பொறுப்பு, உரிமை அவருக்கு உள்ளது. பத்திரிகையாளர்களின் உரிமைகளை இந்தியாவில் பல நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.