• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

மாநகரப் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்: மகளிர் விடியல் திட்ட பயனாளிகளிடம் உரையாடல் | CM Stalin who was travelling in a city bus interacted with the passengers

Byadmin

May 7, 2025


சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து, “மகளிர் விடியல் பயணத் திட்டம்.” குறித்து பயணிகளிடம் உரையாடினார். அப்போது முதல்வர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பயணத்தை தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று (மே 7) பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இன்று தலைமைச் செயலகம் வருகைதந்த தமிழக முதல்வர், தலைமைச் செயலகத்திலிருந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள விழாவுக்கு செல்லும் வழியில், சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 32-B மாநகரப் பேருந்தில் அரசினர் தோட்டம் அருகில் உள்ள ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் செய்து முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாள் அறிவித்த 5 திட்டங்களில் ஒன்றான “மகளிர் விடியல் பயணம் திட்டத்தின்” கீழ் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் உரையாடினார்.

அப்போது, பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் பயணிகள் இந்த மகத்தான திட்டமான “மகளிர் விடியல் பயணம் திட்டம்” மூலம் நாங்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருவதால், நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடிகிறது. இதனால், மாதம் 2000 ரூபாய் வரையில் சேமித்து வைக்க முடிகிறது. அந்த சேமிப்புத் தொகையிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கான படிப்பு செலவுகளுக்கும், மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம். இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் நான்காண்டு முடிவடைந்து ஐந்தாண்டும் ஆண்டு தொடங்குவதையொட்டி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்றும், தங்களது விரும்பத்தை தெரிவித்துக்கொண்டனர்.

தமிழக முதல்வர், விடியல் பயணம் திட்டத்தில் மூலம் பயன் பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பேருந்து பயணத்தை தொடர வேண்டும் என்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin