• Thu. Oct 3rd, 2024

24×7 Live News

Apdin News

“மாநாடு 100% வெற்றி; விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்” – விசிகவினருக்கு திருமாவளவன் அறிவுரை | conference success; Thirumavalavan advise the volunteers to ignore the criticism

Byadmin

Oct 3, 2024


சென்னை: உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் இன்று (அக.3) அவர் பேசியது: “உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நேற்று (அக்.2) நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. மாநாட்டை வெற்றி பெறச் செய்த விசிகவினருக்கும், அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்புரையாற்றிய தோழமை கட்சித் தலைவர்களுக்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

திமுக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மாநாட்டில் பங்கேற்ற திமுக பிரதிநிதிகளும், விசிக கோரிக்கைகளுக்கு முரணாக எதுவும் பேசவில்லை. இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி. லட்சக்கணக்கான பெண்கள் மாநாட்டில் பங்கேற்றதை சொல்ல விரும்பாதவர்கள், கட் அவுட் மீது ஏறி நின்றனர், காவல் துறையினரை இடித்து தள்ளினர் என எதிர்மறை தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.

குறைந்தபட்சம் 2 லட்சம் பெண்கள் மாநாட்டில் பங்கேற்றிருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அவர்கள் வந்ததே மாநாட்டுக்கான சிறப்பு. இதை மனம் திறந்து பாராட்ட யாருக்கும் மனமில்லை. இது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். மது அருந்திவிட்டு இளைஞர்கள் மாநாட்டுக்கு வந்ததாக கூறுவது 100 சதவீதம் வடிகட்டிய பொய். லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டபோதும் யாருக்கும் பாதிப்பில்லை என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. 100 சதவீதம் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

நமக்கும் மக்களுக்குமான பிணைப்பை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. மது ஒழிப்பு தொடர்பான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை மாநாட்டில் தொடங்கி, முதல் கையெழுத்திட்டேன். கிராமம் தோறும் மது ஒழிப்பு மகளிர் குழுவையும் உருவாக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறோம். மாநாட்டில், காந்தியையும், ராஜாஜியையும் குறியீடாக வைத்ததில் நம் வளர்ச்சியை விரும்புவோர் முரண்படுவதை பார்க்கிறேன். அந்த முரண்பாட்டில் நியாயமிருப்பதை உணர்கிறேன். விசிகவின் முன்னணி நிர்வாகிகள் உடன்படாதபோதும், மதுவிலக்கில் காந்தி, ராஜாஜி ஆகியோரின் பங்களிப்பை எடுத்துச் சொல்லும் வகையிலேயே அவர்களை அடையாளப்படுத்தி இருந்தோம். இதில் வேறெந்த நோக்கமும் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.



By admin