பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியதும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்கான முந்தைய நடவடிக்கைகள்
பட மூலாதாரம், Facebook
முதலமைச்சர் தனது உரையில், மாநில சுயாட்சி, மாநிலங்களின் அதிகாரம் குறித்து இதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பட்டியலிட்டார்.
“மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும். இதனை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எதையும் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, 1969ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு. கருணாநிதி, ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராயும் பொருட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக ஒன்றிய-மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து 1971ஆம் ஆண்டு ராஜமன்னார் குழு தனது அறிக்கையை வழங்கியது. அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பு, 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் இதே சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் மு. கருணாநிதி நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983ஆம் ஆண்டில் சர்க்காரியா தலைமையிலான ஆணையம்; 2004ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் இதுநாள் வரையில் எந்தவித மாற்றமுமின்றி, ஏமாற்றமே தொடர்கிறது” என்று குறிப்பிட்டார்.
‘பறிக்கப்பட்ட மாநில உரிமைகளின் பட்டியல்’
பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு, மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக மத்திய அரசால் பறிக்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், அதை பட்டியலிட்டார்.
“மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது. இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும்விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020இன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது.” என்றார்.
“ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது.
இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இயற்கை சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், வழங்கப்படவே இல்லை” என்று கூறினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மேலும், “ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன”. என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் பரிந்துரைகளை வழங்கக் குழு அமைப்பு
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திடவும் மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
“இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.” என்று கூறினார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், “ஒன்றிய-மாநில அரசுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும் நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து விவகாரங்களையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;
மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்; நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;
1971ல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும் 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இதன் இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும்” என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, பல கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
குழு உறுப்பினர்களின் பின்னணி என்ன?
பட மூலாதாரம், sci.gov.in
நீதியரசர் குரியன் ஜோசப்: 2000வது ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப், 2010ல் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக்கப்பட்டார். 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கினார். நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், அப்சல் குரு வழக்கு, முத்தலாக் வழக்கு ஆகியவற்றில் இவரது கருத்துகள் அகில இந்திய அளவில் கவனிக்கப்பட்டன.
அசோக் வர்தன் ஷெட்டி: 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு அரசில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், ஊரக வளர்ச்சித் துறை, உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலர் ஆகிய பதவிகளை வகித்தவர். 2011ஆம் இவர் ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்குப் பிறகு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.
மு. நாகநாதன்: சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியராக இருந்த மு. நாகநாதன், முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். 2006 தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, மாநில திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக நியமிக்கப்பாட்டார் மு. நாகநாதன்.
இவர் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தபோது, சென்னையிலிருந்து மட்டும் திட்டமிடாமல், ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்துக்கும் சென்று அங்குள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், நகராட்சித் தலைவர், சமூக ஆர்வலர்கள் போன்ற பல தரப்பினரையும் சந்தித்து அவர்களது கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் திட்டக்குழுவின் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு