• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

‘மாநில நட்புறவை கெடுக்க சதி’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு | Actress Kasturi Bail Plea hearing: TN Govt Oppose

Byadmin

Nov 12, 2024


மதுரை: ‘ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.

பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பதால், அந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க முடியாது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.

கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் வாதிடுகையில், “சென்னைக் கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராகவும் அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி, “குறிப்பிட்ட சிலர் குறித்து தான் மனுதாரர் அவ்வாறு பேசினார் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட சிலரை பற்றி பேசும் போது அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றார்.

அதற்கு ஏ.கே.ஸ்ரீராம், “மனுதாரர் தெலுங்கு பேசும் பெண்களை தவறாகப் பேசவில்லை. ‘அந்தக் காலத்தில் ராஜாக்கள் கூட சேர்த்துக்கொண்ட மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசுபவர்கள்’ என்று தான் பேசியுள்ளார். தெலுங்கு பேசும் பெண்களை அவர் அவதூறாக பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்சினைகள் உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலங்கானா. திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.

சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார். இதையடுத்து, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக நவ.14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

காணொலியில் தோன்றிய நடிகை கஸ்தூரி: இந்த வழக்கு காலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது காணொலியில் நடிகை கஸ்தூரி திடீரென ஆஜரானார். பின்னர் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “கஸ்தூரி அந்தப்புரம் குறித்து ஏன் பேசினார்? அவரது அந்தப் பேச்சுதானே சர்ச்சையாகியுள்ளது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி தரப்பில் அவரிடம் விவரம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

முன்னதாக, நீதிபதி மற்றொரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது உயர் நீதிமன்ற காணொலியில் ஆஜரான நடிகை கஸ்தூரி, வீடியோவை மட்டும் ஆப் செய்துவிட்டு, மைக்கை ஆன் செய்துகொண்டு வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தது காணொலி வாயிலாக உயர் நீதிமன்ற விசாரணையை கண்காணித்துக் கொண்டவர்களுக்கு தெளிவாக கேட்டது. போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வரும் நடிகை கஸ்தூரி, உயர் நீதிமன்ற விசாரணையில் காணொலி வழியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



By admin