• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

மாந்தை கிழக்கு பிரதேச சபை அமர்வில் அமளி துமளி

Byadmin

Oct 25, 2025


முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (24) தவிசாளர் இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆரம்பத்திலிருந்தே அமளிதுமளி நிலவிய நிலையில் சபை உறுப்பினர்கள் சிலர் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த சத்தியமூர்த்தி சத்தியவரதன் (உபதவிசாளர்), செல்லையா அமிர்தலிங்கம், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த வைரமுத்து ஜெயரூபன், சிவஞானசுந்தரம் நிக்சன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நடராசா மகிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

13 உறுப்பினர்களை கொண்ட இச்சபையின் இன்றைய அமர்வில் 10 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்த நிலையில், அவர்களில் ஐவர் வெளிநடப்பு செய்ததையடுத்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால் சபை கூட்டத்தினை நடத்த முடியாது என தவிசாளர் அறிவித்து, கூட்டத்தினை 15 நாட்களுக்கு பிற்போட்டார்.

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

இன்றைய தினம் சபையின் 4ஆவது அமர்வு நடைபெறுகிறது. ஆனால், இதற்கு முன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சபை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் திணைக்களங்களுக்கு அனுப்பப்படாததுடன், அவற்றை செயல்படுத்துவதிலும் தவிசாளர் அலட்சியம் காட்டி வருகிறார்.

அடுத்த 14 நாட்களுக்குள் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அனுப்பினால் அடுத்த அமர்வில் கலந்துகொள்வோம்” என தெரிவித்தனர்.

உப தவிசாளருக்கு எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. தவிசாளர் தன்னிச்சையாக அனைத்து பொறுப்புக்களையும் தன்னகத்தே வைத்துள்ளார். மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னேறாத நிலை நிலவுகிறது.

எந்தவித கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்றவேளை மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயலாளர், தவிசாளரையும் இணைத்து தன்னிச்சையாக செயற்பட்டு எந்தவொரு அபிவிருத்தி வேலைகளையும் செய்ய விடாது புறக்கணித்து வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினர்.

கடந்த கூட்டத்தில் 40,500 ரூபா சபையில் அனுமதி கோரப்பட்ட தொகை இன்றைய அமர்வு அறிக்கையில் ஒரு இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மோசடியை உணர்த்துகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வட மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடி மாந்தை கிழக்கு பிரதேசசபை செயலாளரை மாற்றி தருமாறும் சபையின் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளது என கேட்டபோது தவிசாளர் அதில் பொறுப்பேற்க மறுத்தார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபை பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைமைகளை கேட்டுக்கொண்டனர்.

13 உறுப்பினர்களை கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச சபையில், தமிழ் அரசுக் கட்சி 4 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலா 2 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin