மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது.
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறவுள்ளதால், மாநாட்டுக்காக பிரமாண்ட திடல் தயார் செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கட்சியின் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். கலைநிகழ்சிகளுடன் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றிய பிறகு, அவர் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, அன்புமணியும், நிறைவாக ராமதாஸும் உரையாற்றுகின்றனர்.
அனைத்து பகுதிகளிலும் இருப்பவர்கள் நிகழ்ச்சிகளை பார்க்க வசதியாக எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. வன்னியர் சங்கம் உருவானது முதல் இப்போது வரையிலான வரலாற்று தொகுப்பு அடங்கிய புகைப்படங்கள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், வாகனங்கள் பழுதை சரிசெய்ய மெக்கானிக் ஷெட்டுகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருபவர்கள் மது குடிக்கக்கூடாது. மதுபாட்டில்கள் வைத்திருக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அன்புமணி விதித்துள்ளார். சமீபத்தில் மாநாட்டு பாடல்கள் மற்றும் “இனமே எழு உரிமை பெறு” என்ற வாசகம் அடங்கிய மாநாட்டு இலட்சினை வெளியிடப்பட்டது.
மாநாட்டு கோரிக்கைகள்: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கமாகும். 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதம் உயர்த்த வேண்டும். இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும். கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் மாநாட்டில் வலியுறுத்தப்படவுள்ளன.