கோடையையொட்டி மாம்பழம் சீசன் ஆரம்பித்துவிட்டது. மாம்பழப் பிரியர்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்களுக்கு மாம்பழம் திகட்டும் அளவுக்கு கிடைக்கும்.
இந்த மாம்பழம் சாப்பிடுவதால் முகப்பருக்கள் வரும் என்ற ஒரு நம்பிக்கை பெண்களிடையே பரவலாக இருந்து வருகிறது. இது பாதி உண்மை என்கின்றனர் நிபுணர்கள்.
கோடை கால உணவில் மாம்பழம் இல்லாமல் இருக்க முடியாது. உண்மையில் மாம்பழம் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இதனால் சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை சரி செய்யும் திறன் கொண்டது. வைட்டமின் ஏ அதிகமுள்ளதால் வயதாகும் தோற்றத்தைக் குறைகிறது. வைட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் பல சத்துகள் மாம்பழத்தில் இருக்கின்றன.
முகப்பரு ஏற்படுமா?
மாம்பழத்தின் நன்மைகள் இவ்வாறு இருக்க அவற்றைச் சாப்பிடுவதால் முகப்பருக்கள் ஏற்படுமா?
மாம்பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றின் மீது பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. எனவே, மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவிவிட்டு, சாப்பிடுவதற்கு முன்பு தோலையும் முழுவதுமாக அகற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஏனெனில் இந்த பூச்சிக்கொல்லிகள் முகப்பரு பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகின்றன. அவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு கடுமையான தோல் வெடிப்புகள், முகப்பருக்களை ஏற்படுத்துகின்றன.
சிலருக்கு சில பழங்கள் ஒவ்வாமை காரணமாக முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகள் வரலாம். எனவே, சரும அலர்ஜி இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்துவிடுவது நல்லது.
அதிகமாக சர்க்கரை இருக்கும் உணவுகளைச் சாப்பிட்டால் முகப்பரு வர வாய்ப்புள்ளது. மாம்பழத்திலும் இனிப்புச் சுவை அதிகமிருப்பதால் அதிகமாக சாப்பிடும்போது முகப்பருக்கள் ஏற்படலாம். மாம்பழம் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எந்தவொரு உணவையும் அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்துதான். மாம்பழம் அதிகமாக சாப்பிடுவதால் உடல்ரீதியாக சில பிரச்னைகளையும் எதிர்கொள்ளலாம். எனவே, பாதிப்புகள் இல்லாமல் இருக்க மாம்பழத்தை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
The post மாம்பழம் சாப்பிட்டால் முகப்பருக்கள் வருமா? appeared first on Vanakkam London.