0
மாய பிம்பம் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஜானகி ஸ்ரீனிவாசன், ஆகாஷ் நாகராஜன், எஸ். ஹரி கிருஷ்ணா, ராஜேஷ் பாலா, எம். அருண்குமார் , மணிமேகலை மற்றும் பலர்.
இயக்கம் : கே. ஜே. சுரேந்தர்
மதிப்பீடு : 2/5
தமிழ் சினிமாவில் புது முகங்களின் படைப்புகள் பல தருணங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வெற்றி பெறுவதுண்டு. அந்த வகையில் ‘மாய பிம்பம் ‘ எனும் இந்தப் படம் குறித்து தமிழ் திரையுலகில் சாதனை படைப்புகளை வழங்கிய வெற்றியாளர்கள் தங்களின் பார்வையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு.. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். இந்நிலையில் பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு நிறைவான அனுபவம் கிடைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
2005 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் மோகன் – ஜீவா ( ஆகாஷ்) – ரமேஷ் – முரளி – என நான்கு நண்பர்கள் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள். இதில் ஒரு நண்பர் தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் குறிப்பிடும் சுகர் பேபி – சுகர் மம்மி -சுகர் பாய்- விடயத்தில் கெட்டிக்காரர்.
அந்த நண்பர் பெண்களை பாலியல் ரீதியாக வீழ்த்துவது குறித்த தன்னுடைய அனுபவத்தை விவரிக்க .. நண்பர்கள் அதனால் உந்தப்படுகிறார்கள். இந்தத் தருணத்தில் ஜீவா.. பேருந்து பயணத்தின் போது எதிர் திசையில் வரும் பேருந்தில் பயணிக்கும் பெண்ணை கண்டவுடன் காதலிக்க தொடங்குகிறான். பிறகு அந்தப் பெண் தனியார் வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியர் சுமதி ( ஜானகி) என தெரிய வருகிறது. அதன் பிறகு நண்பர்கள், ‘அவளுக்கு உன்னை பிடித்திருக்கிறது.
அதனால் துணிச்சலுடன் நண்பரின் அறைக்கு தனியாக அழைத்துச் செல்’ என தூண்டிவிட….இதனால், ஜீவா- சுமதியை தன் நண்பரின் அறைக்கு அழைக்க, ஜீவா மீதான பேரன்பின் காரணமாக சுமதியும் செல்கிறாள். அங்கு ஜீவா- சுமதி இடையே எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஜீவாவும் சுமதி இணைந்தார்களா? இல்லையா ? இவர்களின் காதல் என்ன ஆனது?என்பதுதான் இப்படத்தின் கதை.
சிறைச்சாலையில் ஜீவா எனும் கதாபாத்திரம் தன் கடந்த காலத்தை விவரிப்பது போல் தொடங்கும் திரைக்கதை.. சீராக சிறப்பாக பயணிக்கிறது. இரண்டாம் பகுதியில் சுமதி யார்? என ஜீவா விசாரித்து தெரிந்து கொள்ளும் காட்சியிலும்… ஜீவா மருத்துவக் கல்வியை படிக்கும் மாணவர் என்பதால் உச்சகட்ட காட்சியில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
அதிலும் சுமதியின் பார்வையில் இருந்து ஜீவாவின் சந்திப்பு… நடவடிக்கை… வேறொரு கோணத்தில் விவரிக்கப்படும் போது ‘அட ‘போட வைக்கிறது. ஆனால் முடிவு ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக் கொள்ள தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய முதன்மையான அம்சம் சுமதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜானகி ஸ்ரீனிவாசன் தான். இளமையின் குறுகுறுப்பை- துறுதுறுப்பை – தவிப்பை… நுட்பமான பாவனையின் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தடையில்லாமல் நுழைகிறார். அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து அதன் வீரியத்தையும், அழுத்தத்தையும் சிந்தாமல் சிதறாமல் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். தமிழ் சினிமாவிற்கு ஜீவனுள்ள நடிப்பை வழங்கும் நடிகையை வரவேற்போம்.
இவரைத் தொடர்ந்து ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்.
நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணா – ராஜேஷ் பாலா – அருண்குமார் – திரைக்கு புதியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்துகிறார்கள்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு படைப்பின் உணர்வுபூர்வமான அனுபவத்தை நேர்த்தியாக வழங்குகிறது. படத்தொகுப்பாளர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு, பத்து நிமிட காட்சிகளை குறைத்து இருக்கலாம்.
2017 ஆம் ஆண்டில் உருவான இந்தத் திரைப்படம் பல தடைகளை கடந்து 2026 ஆம் ஆண்டில் வெளியாகிறது. பாலியல் தொழிலாளி ஒருவரின் மகளாக இருந்தாலும் தன்னுடைய வாழ்வியலை அறம் சார்ந்து அமைத்துக் கொள்ளும் இளம் பெண்ணுக்கும், மருத்துவக் கல்வி பயிலும் மாணவனுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான காதலை பேசி இருப்பதால்… பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடும்.
மாயபிம்பம் – நூலறுந்த பிறகும் பறக்கும் பட்டம்